’குபேரா’ பட விழாக்களில் ராஷ்மிகா மந்தனாவை ‘நேஷனல் க்ரஷ்’ என்று நாகார்ஜுனா சொன்னாலும் சொன்னார்; அதன்பிறகு, அவரைக் குறித்த தகவல்களை ரசிகர்கள் தேடியலைவது அதிகமாகிவிட்டது. சமீபத்தில் அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒரு பேட்டியில் பல விஷயங்களைப் பேசினார் ராஷ்மிகா. அதிலொன்று, பொதுவெளியில் அவர் நடந்துகொள்ளும் விதம் குறித்தான ‘நெகட்டிவ்’வான விமர்சனங்கள் வேகமாகச் சமூகவலைதளங்களில் பரவுவது.
இப்படிக் கடுமையான விமர்சனங்களுக்குத் தான் அடிக்கடி ஆளாகிவருவதாக, அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ராஷ்மிகா.
“நான் ரொம்ப எமோஷனலான ஆளு; அதேநேரத்துல ரொம்ப உண்மையாவும் இருப்பேன். ஆனால் எப்போதும் அதை என்னால வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், இங்க ரொம்ப அன்பா இருந்தா போலியா இருக்குறதா நினைக்குறாங்க. ரொம்ப பலவீனமான ஆள்னு நினைக்குறாங்க.
சில பேர், கேமிராவுக்காக இதெல்லாம் பண்றதா பேசுறாங்க. அதாவது, ரொம்ப ரியலா இருக்கறதே சில நேரங்கள்ல ஏத்துக்க முடியாததா மாறுது.
அதனால, உங்களால அன்பா இருக்க முடியாத சூழல்ல ஏதும் பேசாம இருக்கறதே நல்லது. ஏன் நெகட்டிவ்வா பேசுறதுக்கு நாம வழி ஏற்படுத்திக் கொடுக்கணும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா. கடந்த காலங்களில் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக்கொள்ள முயன்றதைப் பலர் ‘ட்ரோல்’செய்ததே இதற்குக் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.
தற்போது ராஷ்மிகா கைவசம் ‘தமா’ என்ற இந்திப்படமும் ’தி கேர்ள்ப்ரெண்ட்’ எனும் தெலுங்கு படமும் இருக்கின்றன. இது போக ‘அட்லி – அல்லு அர்ஜுன்’ இணையும் படம் உட்படச் சில பெரிய படங்களிலும் அவர் தலைகாட்ட இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
