ராணி கிட்டூர் சென்னம்மா, ஜான்சி ராணி லட்சுமி பாய் என துணிச்சசலான பெண்கள் பெயரில் இந்திய கடலோர கப்பல்கள் இயங்கி வரும் நிலையில், தென்னாட்டில் இருந்து வெள்ளையரை விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை ரோந்து கப்பலுக்கு சூட்ட இந்திய கடலோர காவல்படை பரிசீலனையைத் தொடங்கியிருக்கிறது. Velu Nachiar named to be coastal ship
சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படை திட்டக்குழு, இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியதன் மூலம், விரைவு ரோந்து கப்பலுக்கு வேலுநாச்சியாரின் பெயரை சூட்டுவதற்கான செயல்முறை பணிகள் தொடங்கியுள்ளன.
“கடலோரக் காவல்படை கப்பல்களுக்கு வீரமங்கைகளின் பெயர்களை சூட்டும் வழக்கப்படி, ராணி வேலு நாச்சியாரின் பெயரை வைப்பதற்கும் பரிசீலிக்க வேண்டும்” என்று கடலோர காவல்படை தலைமையகத்துக்கு அனுப்பிய குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மகத்தான முன்னெடுப்புக்கு பின்னணியாக இருந்திருப்பவர் நமது மின்னம்பலம் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான எழுத்தாளர் ஸ்ரீராம் சர்மா அவர்கள். மின்னம்பலம் இதழில் பல்வேறு விவகாரங்கள் குறித்து, காத்திரமான கட்டுரைகளை எழுதி வரும் ஸ்ரீராம் சர்மா, அடிப்படையில் வேலுநாச்சியார் பற்றிய ஆராய்ச்சியாளர்.
வேலு நாச்சியார் பற்றி கள ஆய்வு, கருத்தியல் ஆய்வு என முழுமையான ஆய்வு மேற்கொண்டு அதில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில்… வேலுநாச்சியார் வரலாற்று நாட்டிய நாடகத்தை தமிழ்நாடு உட்பட உலகின் பல்வேறு முக்கிய மையங்களில் அரங்கேற்றி வருகிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நாட்டிய நாடகத்தை கண்டு பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் வேலுநாச்சியாரை அரங்கேற்றி, இந்தியாவின் முதல் குடிமகளையே வியக்க வைத்தவர்.
வேலுநாச்சியாரின் வீரத்தை பற்றி ஆய்வு செய்த ஸ்ரீராம் சர்மா, நாடகத்தோடு நின்றுவிடாமல் 2016 ஆம் ஆண்டிலேயே ஒரு முக்கியமான முன்னெடுப்பைச் செய்தார்.
கடலோர காவல்படை கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயரை சூட்ட வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டில் அவர் இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இந்திய கடற்படை விசாகப்பட்டினம், மும்பை, கொச்சி மற்றும் சென்னையில் அதன் முக்கிய செயல்பாட்டு தளங்களைக் கொண்டுள்ளது. திருநெல்வேலி அருகில் உள்ள விஜயநாராயணபுரத்தில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை மையம் இயங்கி வருகிறது.
பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் நினைவாக கடற்படை மையத்துக்கு கட்டபொம்மன் பெயர் சூட்டப்பட்டது.
இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அடுத்ததாக தேசத்திற்கு அர்ப்பணிக்கப் போகும் கப்பற்படை கப்பலுக்கு ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய ராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்ட வேண்டும்” என்று கேட்டுகொண்டிருந்தார்.
அவரது கருத்துகளை ஏற்று இப்போது அதற்கான நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தனது கனவு நனவாக போவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஸ்ரீராம் சர்மா. மின்னம்பலம் சார்பாக அவரிடம் பேசியபோது,
“2016 இல் நான் இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கு இதுகுறித்து எழுதினேன் . உடனடியாக எனக்கு பதில் அளித்த அவர்கள், இதுகுறித்து சென்னை கடலோர காவல்படை தலைமையகத்தில் சென்று நேரடி மனுவாக அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். நானும் உடனடியாக அவ்வாறே செய்தேன். அந்த முயற்சி இப்போது முளைவிட்டிக்கிறது. ராணி வேலுநாச்சியாரின் பெயர் இந்திய கடலோர காவல்படை கப்பலில் பொறிக்கப்படுவதை விட பெரு மகிழ்ச்சியும் பெருமையும் இருக்க முடியாது. விரைவில் இந்த நடவடிக்கைகளை பூர்த்தி செய்திட வேண்டும்” என்றார்.
முன்னதாக, தென் சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்,ராணி வேலு நாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பெயரை கடலோர காவல் படையின் விரைவு ரோந்து கப்பலுக்கு சூட்ட வேண்டும் என்று மக்களவையில் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன், பிரியா
இனி ஐபோனிலும் ’சென்னை பஸ்’ செயலி பயன்படுத்தலாம்!
துப்பாக்கிச்சூட்டில் விவசாயி உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
IPL 2024: அட்டவணை வெளியானது… முதல் போட்டியில் மோதப்போறது இவங்க தான்!
Velu Nachiar named to be coastal ship