ரங்கோலி : விமர்சனம்!

Published On:

| By christopher

கிளாமர் இல்லா ‘துள்ளுவதோ இளமை’!

பதின்ம வயதுகளில் வரும் காதலுக்கு ஈடிணை இல்லை. உலகம் முழுக்கப் பல புனைவுகள் அதனை முன்வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன; பெருவெற்றியைப் பெற்றிருக்கின்றன. ஆனால், அந்த காதலை அங்கீகரிப்பதாகக் காட்டுவதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. ’அலைகள் ஓய்வதில்லை’, ‘பன்னீர் புஷ்பங்கள்’ காலம் தொட்டு அது தொடர்கிறது.

ADVERTISEMENT

ஏனென்றால், அந்தக் காதலில் கிடைக்கும் இன்பங்களும் துன்பங்களும் வாழ்நாள் முழுக்கச் சம்பந்தப்பட்டவர்களிடம் தாக்கம் ஏற்படுத்தும். சிறு கோணல் கூட பெரும் சரிவை உண்டாக்கிவிடும்.

அதனாலேயே, பதின்பருவக் காதலை இந்தச் சமூகமும் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் அதற்கு மாறான நிலையே நிலவுகிறது.

ADVERTISEMENT

அது குறித்துப் பேசும் படமாக உருவாகியிருக்கிறது ‘ரங்கோலி’. இதன் ட்ரெய்லர் நல்லதொரு அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. முழுப்படமும் பார்த்து முடித்தபிறகும் அதில் கருத்து மாற்றம் நிகழ்கிறதா?

ADVERTISEMENT

துள்ளும் இளமை!

சத்யமூர்த்தி என்ற சத்யா (ஹமரேஷ்), ராயப்பேட்டை மாநகராட்சிப் பள்ளியில் படித்துவரும் பதினோராம் வகுப்பு மாணவர். நண்பர் அப்துல் உடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடும்போது, மைதானத்தில் எதிரணியினருடன் மோதல் ஏற்படுகிறது. அப்பிரச்சனை காவல் நிலையம் வரை செல்ல, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சத்யாவை தனியார் பள்ளியில் சேர்க்க முடிவெடுக்கின்றனர் அவரது பெற்றோர் (முருகதாஸ் – சாய் ஸ்ரீ).

சத்யாவின் தந்தை வண்ணான் துறையில் துணி துவைக்கும் வேலை செய்கிறார். அவரது சகோதரி, தந்தைக்கு உதவியாக இருக்கிறார். நாள் முழுக்க துவைத்தால் அலர்ஜி ஏற்படும் என்பதால், அவரது தாய் வீட்டிலேயே இருக்கிறார். அப்படியிருப்பவர்கள், சத்யாவை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காகத் தங்களது வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ளத் தயாராகின்றனர். சத்யாவை வேறு பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். அவருக்கோ, அந்த பள்ளிச்சூழல் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

சேர்ந்த முதல் நாளே, அங்கு படிக்கும் கௌதம் (ராகுல்) என்ற மாணவரோடு சத்யாவுக்கு மோதல் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, கௌதம் ஒருதலையாகக் காதலிக்கும் பார்வதி (பிரார்த்தனா சந்தீப்) என்ற மாணவியை முன்வைத்து சண்டை வருகிறது. அந்த சமயங்களில், கௌதமின் நண்பர்கள் சத்யாவை ‘லோக்கல்’ என்று சொல்லி கிண்டலடிக்கின்றனர். அவர்களது எதிர்ப்பு சத்யாவைச் சூடேற்றுகிறது. அதன் தொடர்ச்சியாக, பார்வதியை வேண்டுமென்றே பார்க்க, ரசிக்கத் தொடங்குகிறார் சத்யா.

அதனைப் பொறுக்க முடியாமல், கௌதம் அவரைத் துரத்தி துரத்தி அடிக்கிறார். ஒவ்வொரு முறையும் பிரச்சனை தலைமையாசிரியர் வரை போகிறது. அப்போதெல்லாம், சத்யாவையே குற்றவாளியாகக் கருதுகிறது பள்ளித் தரப்பு. அவரது பின்னணி மற்றும் அவர் ஏற்கனவே படித்த அரசுப்பள்ளி குறித்த பொதுப்புத்தியே அதற்குக் காரணம்.

ஒருமுறை, ஆண்கள் கழிவறையில் பார்வதியைக் காதலிப்பதாகச் சத்யா கைபடக் கரியால் எழுதியது போல வாசகங்கள் காணப்படுகின்றன. அது பெரிய பிரச்சனையாகி, சம்பந்தப்பட்ட இருவரது பெற்றோரும் தலைமையாசிரியரைச் சந்திக்கின்றனர். அந்த சம்பவம், சத்யா மீது பார்வதிக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. அது, சத்யாவின் குடும்பத்திலும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. தாய், சகோதரி, தந்தை உடன் சரிவரப் பேச முடியாத நிலைமை உருவாகிறது.

தனக்கிருக்கும் தடைகளை உடைக்க முடிவு செய்யும் சத்யா, அந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படிப்பதென்று முடிவெடுக்கிறார். எந்தப் பிரச்சனையிலும் ஈடுபடாமல் படிப்பில் கவனம் செலுத்துகிறார்.

இந்தச் சூழலில், கழிவறைச் சுவரில் எழுதியது யார் என்ற உண்மை தெரிய வருகிறது. அதையடுத்து, பார்வதி சத்யாவைக் காதலிக்கத் தொடங்குகிறார். அதன்பிறகும், கௌதமும் அவரது நண்பர்களும் சத்யாவைத் தொடர்ந்து சீண்டிக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில், சத்யாவுக்குப் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக தாய், தந்தை, சகோதரி மூவரும் அதிகப்படியாக உழைக்கத் தொடங்குகின்றனர்; அதனால், அவர்களது உடல்நலம் பாதிப்படைகிறது.

அதன்பிறகு என்னவானது? சத்யா அந்த பள்ளியில் தொடர்ந்து படிக்கிறாரா? பார்வதி மீது காதல் பார்வையை வீசுகிறாரா என்று சொல்கிறது ‘ரங்கோலி’.

உண்மையைச் சொன்னால், ‘துள்ளுவதோ இளமை’ போன்று இதுவும் துள்ளும் இளமைப் பருவத்து நிகழ்வுகளின் தொகுப்பு தான். ஆனால், கிளாமர் சமாசாரங்கள் எதுவும் கிடையாது என்பதே இதன் சிறப்பு.

நேர்த்தியான காட்சியாக்கம்!

தெய்வ திருமகள், மாநகரம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நாயகன் ஹமரேஷ், இதில் தனுஷ் ரசிகராக வருகிறார். அவரைப் போலவே, திரையில் மிக இயல்பாகத் தோன்றியிருக்கிறார். இதுபோல அடுத்தடுத்து நல்ல பாத்திரங்கள் கிடைத்து, அதில் பிரகாசிக்கட்டும்.

நாயகி பிரார்த்தனா, மிகச்சாதாரணமாக நேரில் பார்க்கும் பெண் போலவே இதில் வந்து போயிருக்கிறார். அப்பாத்திரத்தின் பெற்றோர், சுற்றம், நட்பு வட்டம் முழுமையாகத் திரைக்கதையில் காட்டப்படவில்லை என்பதைத் தவிர்த்து, அதனை மிகத்திறம்படக் கையாண்டிருக்கிறார்.

ஹமரேஷின் தந்தையாக வரும் முருகதாஸ், தாயாக நடித்த சாய் ஸ்ரீ மற்றும் சகோதரியாக வரும் அக்‌ஷயா மூவருக்கும் சம அளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஏழ்மையான பின்னணியைக் கொண்டவர் என்பதைக் காட்ட அதிக மேக்கப் இடப்பட்டாலும், அக்‌ஷயாவின் முகத்தில் ‘ரிச்னெஸ்’ தென்படுகிறது. ஆனால் முருகதாஸ் – சாய் ஸ்ரீ இடையிலான ‘கெமிஸ்ட்ரி’ அதனைச் சரிப்படுத்திவிடுகிறது.

சீரியல் நடிகர் அமித் பார்கவ், இதில் தமிழாசிரியராக நடித்துள்ளார். திரையில் அவருக்கும் ‘ஸ்கோர்’ செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் அப்துல் வேடத்தில் நடித்தவர், கௌதம் ஆக வரும் ராகுல் மற்றும் அவர்களது நண்பர்களாக நடித்தவர்கள், நாயகியின் தோழியாக வருபவர் என்று பள்ளிச்சூழலில் நடித்தவர்கள் அனைவருமே மிக யதார்த்தமாகத் தோன்றியுள்ளனர். அதுதான் ‘ரங்கோலி’ கதை உடன் நாம் ஒன்றக் காரணமாக உள்ளது.

கதாபாத்திரங்களின் இயல்பான நடமாட்டத்தை எளிய கோணங்களில் காட்டும் மருதநாயகத்தின் ஒளிப்பதிவு, பரபர காட்சிகளில் நடிப்பவர்களுக்கு இணையாக ஓட்டம் எடுக்கிறது. ஆனால், தப்பித்தவறிக் கூட பிரேமை அழகூட்டுவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ளவே இல்லை.

ஆனந்த் மணியின் கலை இயக்கம், வழக்கமாக நாம் பார்க்கும் பள்ளிகளின் உட்புறத்தைக் காட்டுகிறது. கூடவே, பெருநகரத்தின் ஒருபகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளிகளின் வசிப்பிடத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

கே.எஸ்.சத்யமூர்த்தியின் இசையில் பாடல்கள் தேனாய் இனிக்கின்றன. வீட்டில் போய் இரண்டாம் முறை கேட்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன. போலவே, பாத்திரங்களின் உணர்வுகளுக்கு இடம் தந்து மிகச்சில இடங்களில் மட்டும் ஒலிக்கும் பின்னணி இசை நம்மைத் திரையோடு ஒன்ற வைக்கிறது.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் புதுமுகமான வாலி மோகன் தாஸ். மிக எளிமையான கதையொன்றை எடுத்துக்கொண்டு, அதற்குத் திரையுருவம் தருவது சவாலான பணி. அதனைத் திறம்படச் செய்திருக்கிறார்.

சொல்லப்படாத காதல்!

திரைக்கதையில் நாயகன் தரப்பை மட்டுமே முன்வைக்கும் காட்சிகள் உண்டு. திரும்பத் திரும்ப ஒரேமாதிரியான நிகழ்வுகளும் இக்கதையில் உள்ளன. அவை சற்று சலிப்பை ஏற்படுத்தி, மெதுவாகப் படம் நகரும் தொனியை உருவாக்குவது இதிலுள்ள சில குறைகள். ஆனால், அக்குறைகள் நம் கண்ணில் படாமல் தவிர்க்கும் விஷயங்களும் இதில் இருக்கின்றன. குறிப்பாக, இந்தப் படத்தில் மூன்று காதல்கள் சொல்லப்பட்டுள்ளன.

நாயகனின் பெற்றோராக வரும் முருகதாஸ் – சாய்ஸ்ரீ பாத்திரங்கள் இடையிலான காதல் எப்படிப்பட்டது என்பதைக் காட்டத் தனியாகக் காட்சிகள் இல்லை. ஆனால், திரைக்கதை நகரும் போக்கில் அது நமக்கு உணர்த்தப்படுகிறது.

போலவே, இக்கதையில் நாயகன் நாயகி இடையிலான காதல் எப்படிப்பட்டது என்பதை இயக்குனர் புடம் போட்டு விளக்கவில்லை. இதற்கு மேல் சொன்னால், ‘ஸ்பாய்லர்’ ஆகிவிடும் என்பதால் அதனைச் சொல்லாமல் தவிர்க்கிறேன்.

மிகமுக்கியமாக, திருமண வயதைத் தொட்ட பெண்ணாக நாயகனின் சகோதரி பாத்திரம் காட்டப்பட்டுள்ளது. ஒரு காட்சியில், ’நானும் என் இஷ்டப்படி லவ் பண்ணா இப்படித்தான் கூப்பிட்டு வச்சு பேசுவீங்களா’ என்று அப்பாத்திரம் பெற்றோரிடம் பேசும் வசனமொன்று இடம்பெறுகிறது. அது, இக்கதையில் மிகச்சன்னமாக இடம்பெறும் காதலொன்றை நமக்கு உணர்த்துகிறது.

அந்த காதல்களே ‘ரங்கோலி’ படத்தின் பெரும்பலம். ஒருவேளை திரையில் அதனை உணர முடியவில்லை என்றாலும், அப்பாத்திரங்கள் மனதோடு ஒட்டிக்கொள்ளும் மாயாஜாலத்தை உணர முடியும். காரணம், அந்த காதல்களைச் சமூகப் பொறுப்புணர்வோடு இயக்குனர் திரையில் கையாண்டிருப்பதுதான். அதுவே ‘ரங்கோலி’ படத்தைக் கொண்டாடித் தீர்க்க வேண்டுமென்ற கட்டாயத்தை உண்டுபண்ணுகிறது. அதற்காக, இயக்குனர் வாலி மோகன் தாஸ் & குழுவை வலிக்கும் வரை கைத்தட்டல்களைத் தந்து வரவேற்றாக வேண்டும்!

பருவமழை: மருத்துவக் கட்டமைப்புகள் தயாராக இருக்க உத்தரவு!

ரூ.79.28 கோடியில் 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share