ராமேஸ்வரம் டூ தலைமன்னார்: கோவா கூட்டத்தில் முக்கிய கோரிக்கை வைத்த அமைச்சர் எ.வ.வேலு

Published On:

| By Kavi

ராமேஸ்வரம் டூ தலைமன்னார் கப்பல் சேவையினை மீண்டும் துவங்க உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதியுதவி வழங்குமாறு அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் கடல்சார் துறையை மேம்படுத்துவதில், கடலோர மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியை வலுப்படுத்தும் விதமாக கோவாவில் செப்டம்பர் 14ஆம் தேதி கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்த சோனவாலும் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அமைச்சர் வேலு, “நாகப்பட்டினம் துறைமுக வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.10.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி.

இந்த நிதி உதவியானது நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையே பாதுகாப்பான மற்றும் வசதியான கப்பல் சேவைகளை உறுதி செய்து, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும்.

நாகப்பட்டினம் துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காக, சாகார்மாலா திட்டத்தின்கீழ் ரூ.300 கோடி நிதியுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நடுத்தர அளவிலான சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களை கையாளுவதற்கும், இலங்கையுடனான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் உதவும்.

கடல்சார் பணியாளர்களின் மேம்பாடு மற்றும் திறன்மேம்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்படும்,

தமிழ்நாட்டின் தென் கடற்கரையோரத்தில் வாழும், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மீனவர் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டுத் திட்டங்களையும், குறிப்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல்களில் மாற்று வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

தூத்துக்குடியிலுள்ள இந்த தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக சாகர்மாலா திட்டத்தின், கடலோர சமூக மேம்பாட்டின்கீழ், 100% சதவீத நிதியுதவியாக ரூ.11.47 கோடிக்கான அனுமதி விரைவில் வழங்கவேண்டும்.

வரலாற்று சிறப்புமிக்க இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் பொருளாதார மதிப்பு பெற்றுள்ளது.

இந்த சேவை ஒரு காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான முக்கிய இணைப்பாக அடையாளப்படுத்தப்பட்டது. இக்கப்பல் சேவையினை மீண்டும் துவங்க ராமேஸ்வரத்தில் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த 100% சதவீத நிதியுதவி வழங்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் .

ராமேஸ்வரம் தீவு, ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த முக்கியமான தீவின் இணைப்பினை வலுப்படுத்தவும், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தவும், மண்டபம், பாம்பன் மற்றும் தேவிபட்டினத்தில் கூடுதலாக மூன்று மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஜராத்திலுள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஒரு வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்த பாரம்பரியத்தை மாநில அரங்கில் காட்சிப்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தமிழ்நாடு மாநில அரங்கினை உருவாக்குவதற்கு இந்திய அரசு 100% சதவீத நிதியுதவி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

சத்தமே இல்லாமல் நல்ல காரியம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தங்க மனசு

தொடர்ந்து வெப்பம் நீடிக்கும்: வானிலை மையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share