வைஃபை ஆன் செய்ததும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்த புகைப்படம் இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு 7.45 மணி முதல் 8.15 வரை தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகம்.
அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது வருகிற மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவது என்றும், யாருடன் கூட்டணி அமைப்பது என்ற அதிகாரத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அளித்தும் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசத் தொடங்கும்போது, ‘பிரதமர் மோடியாலே இந்தியாவின் மூத்த தலைவர்’ என்று பாராட்டப் பட்ட டாக்டர் அய்யா அவர்களே என்று டாக்டர் ராமதாசை மோடி பாராட்டியதை பேச்சின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டார். ஆனால் இதற்கு பாமக நிர்வாகிகள் கைதட்டவில்லை.
மேலும், டாக்டர் ராமதாஸுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லையே என வருத்தம் தனக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, ‘எனக்கு பாரத் ரத்னா விருது கொடுத்தால் கூட வாங்கமாட்டேன்’ என்று தனது மகன் அன்புமணிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் சேர்த்தே பதில் கொடுத்தார்.
இந்த பின்னணியில், ‘பாமக வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்று அன்புமணி விரும்புகிறார். அடுத்து மூன்றாவது முறையும் மோடியே பிரதமராக வருவார் என்று அன்புமணிக்கு வட மாநில அரசியல் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் தொடர்ந்தால். வரும் மோடி கேபினட்டில் அமைச்சராகிவிடலாம் என்பது அன்புமணியின் கணக்கு.
அதுமட்டுமல்ல… அன்புமணிக்கு அதிமுக மீது ஒரு முக்கியமான அதிருப்தியும் உள்ளது. ‘இந்த மோடி கேபினட்டிலேயே உங்களுக்கும் ஓபிஎஸ் மகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி தர நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் எடப்பாடிதான் அப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்’ என்று அன்புமணியிடம் பாஜக தரப்பில் கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் சேர்த்து அன்புமணியை பாஜக பக்கம் போகலாமா என்று யோசிக்க வைத்திருக்கிறது.
ஆனால் டாக்டர் ராமதாஸோ பாஜகவோடு கூட்டணி வைப்பதை விரும்பாமல் அதிமுகவோடு அணி சேர்வதையே விரும்புகிறார். வட மாவட்டங்களில் பாமகவினர் பலர் பாஜகவில் சேர்வதாக டாக்டர் ராமதாஸுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலையோடு தானோ, அன்புமணியோ பேச்சு நடத்த வேண்டுமா என்று யோசிக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
இப்படி இரு வேறு கருத்துகள் தைலாபுரத்தில் இருந்த நிலையில்தான்… பிப்ரவரி 5 ஆம் தேதி காலை ஏற்கனவே தன்னிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்த சி.வி. சண்முகத்தை மாலையில் வருமாறு கூறியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
டெல்லியில் இருந்த சி.வி. சண்முகம் டாக்டரின் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக எடப்பாடியிடம் சொன்னார். உடனே செல்லுங்கள் என்று எடப்பாடி ஓ.கே. சொல்ல டெல்லியில் இருந்து வேகமாக சென்னை திரும்பிய சி.வி. சண்முகம் விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய வாகனத்தில் செல்லாமல் இன்னொரு தனியார் வாகனத்தில் நேராக திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தை அடைந்தார்.
அங்கே டாக்டர் ராமதாசை சந்தித்தார். பாமக சார்பில் ஒன்பது மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதிகளும் தேவை என்று அதிமுகவிடம் கேட்கப்பட்டிருந்தது. சி.வி. சண்முகமோ ஆறு எம்பி தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்பியும் தருவதாக கூறியுள்ளார். ஆனால் டாக்டர் ராமதாஸ் 9+1 என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த அளவிலே நேற்றைய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
பாஜக தரப்பில் ஏழு மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக அன்புமணிக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பா அதிமுக பக்கமும், மகன் பாஜக பக்கமும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இறுதி முடிவு டாக்டர் ராமதாஸிடம் தான் என்பதுதான் இப்போதைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மலையாளத்தில் ட்வீட் போட்ட ஸ்டாலின் : என்ன காரணம்?
அதிரடி ‘வீரரை’ வளைத்துப்போட்ட ஆர்சிபி… இந்த வாட்டி ‘கப்பு’ மிஸ் ஆகாது!
Comments are closed.