சாமானியன்: விமர்சனம்!

Published On:

| By Selvam

ராமராஜனுக்கு படக்குழு தந்த ’மரியாதை’!

ராமராஜன் நாயகனாக நடித்த 44 படங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மாபெரும் வெற்றிகளைக் குவித்தவை. எண்பதுகளின் பிற்பாதியில் தொடங்கி தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை அவருக்கான சந்தை அபாரமானதாக இருந்தது. தனது ‘ப்ளஸ்’களை மறந்து ‘மைனஸ்’களை திரையில் அதிகம் இடம்பெற வைத்ததும் அதற்கொரு காரணமாக இருந்தது.

ADVERTISEMENT

அப்படிப்பட்ட ராமராஜன் ஒரு விபத்துக்குப் பிறகு முற்றிலுமாகச் செயலிழந்து, அதிலிருந்து மாபெரும் தன்னம்பிக்கையுடன் மீண்டெழுந்தது நம்மில் பலருக்குத் தெரியாதது. அதனைத் தெரிய வைக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது, ராகேஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘சாமானியன்’. டைட்டிலுக்கு தக்கபடி இந்த படம் சாமானிய மக்களின் பிரச்சனைகளைப் பேசுகிறதா?

ADVERTISEMENT

தீவிரவாதியா, கொள்ளையனா?

சென்னையில் இருக்கும் பஸில் பாய் (ராதாரவி) வீட்டுக்கு விருந்தினர்களாக வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த இரண்டு பேர். இருவருமே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். பஸில் பாய் வசிக்கும் அபார்ட்மெண்டுக்கு வந்திறங்கியவுடனேயே, அங்கிருப்பவர்களுக்கு அறிமுகமாகின்றனர். அதில், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் (கஜராஜ்) அடக்கம். அவரது மகன் (கேபிஒய் வினோத்) ட்ரோன்களை வைத்து படமெடுப்பதில் நேரத்தைச் செலவிடுபவர்.

ADVERTISEMENT

அவரிடம், அந்த நபர்கள் இருவரும் தங்களது பேத்திக்கு நாளை பிறந்தநாள் என்று சொல்கின்றனர். அந்த கொண்டாட்டத்தைப் படம்பிடிக்க வேண்டும் என்கின்றனர்.

அடுத்த நாள் காலையில் பஸில் பாய் வீட்டில் இருந்து அந்த நபர்கள் வெளியே வருகின்றனர். அதில் ஒருவர் (ராமராஜன்) சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் ஐசிபி வங்கிக்குச் செல்கிறார். தன்னுடன் அந்த இன்ஸ்பெக்டரின் மகனையும் அழைத்துப் போகிறார்.

இன்னொருவர் (எம்.எஸ்.பாஸ்கர்) அந்த வங்கியின் மேலாளர் வசிக்கும் அபார்ட்மெண்டுக்கு செல்கிறார். அந்த வீடு பூட்டியிருக்க, எதிரேயிருக்கும் மேலாளர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். எதிர்வீட்டில் வசிப்பவரின் தந்தை என்று அறிமுகமாகிறார்; அவர்களது வீட்டு வரவேற்பறையில் காத்திருக்கிறார்.

பஸில் பாய் தனது அபார்ட்மெண்டில் வசிக்கும் கார்த்திக் என்பவரின் வீட்டுக்குச் செல்கிறார். ஐசிபி வங்கியில் உதவி மேலாளராக அவர் இருந்து வருகிறார். அவரது கர்ப்பிணி மனைவியிடம் (ஸ்மிருதி வெங்கட்) தனக்கு ஒரு டீ தருமாறு கேட்கிறார். அவர் சமையலறையில் இருந்து திரும்பும்போது, பஸில்பாய் கையில் துப்பாக்கி இருக்கிறது. அவர் மட்டுமல்லாமல், அந்த இரண்டு நபர்களின் கைகளிலும் கூட துப்பாக்கி இருக்கிறது.

அந்த வங்கியில் இருக்கும் நபர் தன்னோடு ஒரு சூட்கேஸை எடுத்து வந்திருக்கிறார். அதில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு இருக்கிறது. அதனை வங்கி அதிகாரிகளுக்குத் தெரிய வைத்து, மிகச்சில நிமிடங்களில் அந்த வங்கியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் அந்த நபர்.

உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் கேட் பூட்டப்படுகிறது. ‘வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறாரா’ என்று அங்கிருப்பவர்கள் எதிர்பார்க்க, அவரோ அமைதியாக இருக்கிறார். வங்கியில் ஒரு நபர் வெடிகுண்டுடன் புகுந்த விஷயம் காவல் துறைக்குத் தெரிய வர, பெரும்படையே அந்த வங்கியின் அருகே குவிகிறது. அந்த நபர் தீவிரவாதியா, கொள்ளையனா என்று புரியாமல் குழம்புகிறது.

காவல் துறையினரிடம் பேசும் அந்த நபர், மூன்று கோரிக்கைகளை வைக்கிறார். அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிறார். ஆனால், அதனை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. அந்த கோரிக்கைகள் என்ன? மிகச்சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அவர் ஏன் அந்த வங்கியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைய வேண்டும்? அவர் யார் இந்த கேள்விகளுக்குப் பதில் தெரிய முயற்சிக்கையில், அந்த நபரின் பெயர் சங்கரநாராயணன் என்பதும், கார்கில் போரில் அவர் ஈடுபட்டார் என்பதும் தெரிய வருகிறது.

ஒரு ராணுவ வீரர் ஒரு வங்கிக்குள் வெடிகுண்டு, துப்பாக்கி சகிதம் ஏன் புகுந்தார்? அதற்கான காரணம் என்ன என்று சொல்கிறது ‘சாமானியன்’ படத்தின் மீதி. புதுமையான கதை அல்ல என்றபோதும், ஒரு ஆக்‌ஷன் படத்திற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் கொண்டது என்பதை மறுக்க முடியாது.

பழி வாங்கும் கதை!

‘சாமானியன்’ படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு, அது ஒரு பழிக்குப் பழி வகையறா கதை போன்று தோன்றலாம். இதற்கு முன்னர் ‘அன்புக்கட்டளை’ போன்ற படங்களில் அப்படி நடித்திருக்கிறார் ராமராஜன். அதேநேரத்தில் ‘இந்தியன்’, ‘முதல்வன்’ போன்ற மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்திய ‘ஹீரோயிச’ படங்கள் போன்று ‘சாமானியனும்’ ஒரு விஷயத்தைப் பேசுகிறது. அதற்கான விளக்கமாக, பிற்பாதியில் ஒரு பிளாஷ்பேக்கை காட்டியிருக்கிறார் இயக்குனர் ராகேஷ். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

ராமராஜன் சிவந்த கண்களுடன், பெருத்துப்போன உடம்புடன், தளர்வான உடல்மொழியுடன் இப்படத்தில் தோன்றியிருக்கிறார். முப்பதாண்டுகளுக்கு நாம் ரசித்த நாயகனை இதில் நம்மால் பார்க்க முடிவதில்லை. முதுமையில் தென்படும் குழந்தைத்தனமே அவரிடம் வெளிப்படுகிறது. அதையும் மீறி இப்படத்தைப் பார்க்க நாம் செல்லக் காரணமாக இருப்பது, இதுவரை அவர் தந்த படங்களின் உள்ளடக்கம்.

அந்த வகையில், ‘சாமானியன்’ படத்தை ராமராஜனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தயாரிப்பாளர் மதியழகனும் இயக்குனர் ராகேஷும் உருவாக்கியிருக்கின்றனர். ‘மதுரை மரிக்கொழுந்து வாசம்’ பாடல் பின்னணியில் ஒலிக்க, ராமராஜனின் அறிமுகத்தை வடிவமைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
ராதாரவிக்கு இதில் கௌரவ வேடம் என்றே சொல்ல வேண்டும். நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்.

‘கிணத்துல டீத்தூளைக் கொட்டி, அதிலிருந்து இறைச்சு டீயா தர்றியளோ’ என்பது போன்று ஆங்காங்கே ‘கலாய்’ வசனங்களைப் பேசி கலகலப்பூட்டுகிறார் எம்.எஸ்.பாஸ்கர். பிளாஷ்பேக் காட்சியில் ராமராஜனைப் போன்று அவரும் நம்மைக் கண்கலங்க வைக்கிறார்.

படத்தின் ஆதாரமாக விளங்கும் பிளாஷ்பேக்கில் லியோ சிவகுமார் – நக்‌ஷா சரண் ஜோடி நடித்துள்ளது. ‘ஓகே’ எனும் அளவில் அவர்களது பெர்பார்மன்ஸ் உள்ளது. இவர்கள் தவிர்த்து அபர்ணதி, ஸ்மிருதி வெங்கட், போஸ் வெங்கட், தீபா சங்கர், வினோதினி வைத்தியநாதன், சூப்பர்குட் சுப்பிரமணி, சரவண சுப்பையா, ஷரவண சக்தி, அறந்தாங்கி நிஷா, முல்லை, கோதண்டம் என்று பெரும்பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர்.

’பால்காரன் கையில யார்றா துப்பாக்கிய கொடுத்தது’ என்பது போன்று கேபிஒய் வினோத் அடிக்கும் சில ஒன்லைனர்கள் தியேட்டரை அதிர வைக்கிறது. இதில் வில்லனாக நடித்துள்ளார் மைம் கோபி. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரொம்பவே அழுத்தமான நடிப்பை இதில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் தவிர்த்து கௌரவ வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் இதில் தலைகாட்டியுள்ளார்.

யதார்த்தம் அதிகமாகத் திரையில் தென்பட வேண்டிய இப்படைப்பில் சினிமாவுக்கே உரிய ஜிகினாதனத்தை சில இடங்களில் தெளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள்செல்வன். பிற்பாதியில் பிளாஷ்பேக்கினுள் வரும் பிளாஷ்பேக் என்று திரைக்கதை நகர்ந்தாலும், குழப்பமின்றி கதை புரிய வகை செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராம் கோபி.
இளையராஜாவின் இசையில் ‘தத்தி வா தத்தி வா’ பாடல் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கிறது.

ராமராஜனுக்கு அவர் தந்த பழைய பாடல்களை ஆங்காங்கே ஒலித்தாலும், பரபரப்பு கூட்ட வேண்டிய இடங்களில் பின்னணி இசையில் வேகம் கூட்டியிருக்கிறார். ஆனாலும், பின்பாதியில் அவரது பங்களிப்பு நம்மை ஏமாற்றியிருக்கிறது. இப்படத்தின் கதையை கார்த்திக் குமார் எழுதியிருக்கிறார். வங்கியில் கடன் வாங்கிவிட்டு கஷ்டப்படும் சாமானிய மக்களின் வலியை இதில் அவர் பிரதிபலித்திருக்கிறார். ஸ்பாய்லர் என்றபோதும் இதனைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இயக்குனரின் உழைப்பு!

இப்படத்தில் ராமராஜனை எப்படிக் காண்பித்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று உணர்ந்து திரையில் அவரைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராகேஷ். சில ஷாட்களில் உடல் பருமனுடன் ராமராஜன் தோன்றுவதைப் பார்க்கையில், சில ஆண்டுகளுக்கு முன் அவர் விபத்தில் சிக்கி உயிர் மீண்டது குறித்த தகவல்கள் நம் நினைவுக்கு வருகின்றன. முடிந்தவரை அது போன்ற ஷாட்களை தவிர்த்திருக்கிறார் இயக்குனர்.

சில இடங்களில் ரசிகர்கள் கிண்டலடிப்பதையே வசனங்களாகவும் மாற்றி இடம்பெறச் செய்திருக்கிறார். அது அவரது புத்திசாலித்தனமான உத்திகளில் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது. இறுதியாக வரும் பத்து நிமிடங்கள் தவிர்த்து, படம் முழுக்கப் பரபரவென்று நகரும் ஒரு ஆக்‌ஷன் கதையோடு ராமராஜனின் இமேஜை புகுத்தியிருக்கிறார். அதற்கு அவர் செலவிட்ட உழைப்பே, இப்படத்தின் பெரும்பலம்.

’சாமான்யன்’ பார்க்கும் ரசிகர்களுக்கு, ‘இப்படத்தை இன்னும் மெருகேற்றியிருக்கலாமே’ என்றுதான் தோன்றும். பன்னிரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியான இப்படம், ராமராஜனின் ‘பெஸ்ட்’ அல்ல. ஆனால், அவரது பங்களிப்பு திரைத்துறையில் நிறைய நிகழும் என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், ’ராமராஜனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால் நன்றாக இருக்குமே’ என்ற எண்ணத்தையும் மேலெழச் செய்கிறது. அதுவே இப்படத்தின் வெற்றி!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெளிநாட்டு வேலை… தங்க முக்கோணத்தில் மாட்டிக்காதீங்க… -அரசு எச்சரிக்கை!

திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள்… ‘இந்தியா’வின் வெற்றி கலைஞருக்குக் காணிக்கை! -ஸ்டாலின் அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share