ராமநாதபுரம்: ஓபிஎஸ்சின் ‘கேரன்ட்டி’ வாக்குறுதிகள்!

Published On:

| By Aara

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  போட்டியிடுவதால் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பலாப் பழ சின்னத்தில் நிற்கிறார்.

அவரை ஆதரித்து பாஜக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ராமநாதபுரத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில்  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரையூர், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழச் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதற்கிடையே ஓபிஎஸும் ராமநாதபுரம் முழுதும் சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் ஆர்.எஸ். மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராதானூர், ஆனந்தூர், சனவேலி, ஆர்.எஸ். மங்களம் டவுன், பாரனூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஓபிஎஸ்,  பிரச்சாரம் மேற்கொண்டு பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது மக்களை சந்தித்த ஓபிஎஸ்,   “ராமநாதபுர மக்கள் அன்றாடம் சந்திக்கும் குடிநீர்ப் பிரச்சனையை சரிசெய்ய வழி வகுப்பேன்,   சோழந்தூர் கிராமத்தில் இருக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளியை என்னுடைய சொந்த செலவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவேன், கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுப்பேன்” என்று வாக்குறுதிகளை அளித்தார்.

இதனை தொடர்ந்து திருவாடானை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டபோது நாடக கலைஞர்கள் தங்களுக்கென்று நாடகமேடை இல்லை அதனை அமைத்துத் தரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்க, நாடகம் நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட நாடகமேடையும் அமைத்துத் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

தமிழகம் முழுவதிலும் இருந்து ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால்… நாளுக்கு நாள் ஓபிஎஸ் சின் வேகம் அதிகமாகிறது.

ஹீரோவான பிக்பாஸ் போட்டியாளர்… சரியான ஜாக்பாட்… ரசிகர்கள் வாழ்த்து..!

ED விசாரணையில் நடந்தது என்ன? – அமீர் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share