பிறை இன்று தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். ramalan festival march 31
இஸ்லாமிய மக்களின் புனித பண்டிகையாக ரமலான் கருதப்படுகிறது. அவர்களின் புனித நூலான குர் ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், தங்களது கடமைகளில் ஒன்றாக நோன்பிருந்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 30 நாட்களாக நோன்பிருந்த அவர்கள் ரமலான் பண்டிகைக்கு தயாராகி வந்தனர். இஸ்லாமியர்களின் காலண்டர் படி மார்ச் 31ஆம் தேதி ரமலான் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிறை தெரிவதன் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும் என்பதால் தலைமை காஜியின் அறிவிப்புக்காக காத்திருந்தனர்.
நேற்று பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 30-03-2025 அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது. ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 31-03-2025 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப் படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் திங்கட்கிழமை 31-03-2025 தேதி கொண்டாடப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.