ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை அதிகாரி மாற்றம்!

Published On:

| By Selvam

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 3) உத்தரவிட்டுள்ளது. Ramajayam murder case Investigation

கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி திருச்சியில் இருந்த தன் வீட்டிலிருந்து காலை வாக்கிங் சென்ற ராமஜெயம் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தமிழக போலீசாரும் அதன்பிறகு சிபிஐயும் விசாரணை நடத்தி எந்தத் துப்பும் துலங்கவில்லை.

ADVERTISEMENT

இதனையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை தமிழக போலீசாரின் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பி-யாக இருந்த ஜெயக்குமார் உள்ளடக்கிய ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவை பிறப்பித்தது. இந்த குழுவானது தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

“இந்த வழக்கில் தற்போது பல்வேறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கொலைக்கான உள்நோக்கங்களும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த புலன் விசாரணையில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஜெயக்குமார், தற்போது கடலூர் மாவட்ட எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் புலன் விசாரணை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக திருச்சி அல்லது திருச்சி அருகில் உள்ள புலன் விசாரணை அதிகாரிகளை நியமித்தால் இந்த வழக்கின் விசாரணை எளிதாக இருக்கும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், கடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஜெயக்குமார் எஸ்.பி-க்கு மாற்றாக திருச்சி சரக டிஐஜி வருண் குமார், தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் ஆகியோரை கூடுதல் புலனாய்வு அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. Ramajayam murder case Investigation

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share