அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இயக்குர் ஷகீல் அக்தர் சிறப்பு புலனாய்வு குழுவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். நடைப்பயிற்சி சென்றவரை மர்மநபர்கள் கடத்திச் சென்று கொலை செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் வழக்கை 12 தனிப்படைகள், சிபிசிஐடி, சிபிஐ என பல்வேறு தரப்பு போலீசார் விசாரித்தனர்.
ஆனால் கொலையாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி இயக்குநர் ஷகீல் அக்தர் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான டி.எஸ்.பி மதன் மற்றும் ஆய்வாளர்கள் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த 6 மாதமாக விசாரணை செய்து வருகிறது.
வழக்கில் குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் வெளிவராதநிலையில், வெர்சா என்ற காரில் ராமஜெயம் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதை மட்டும் போலீசார் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிபிசிஐடி இயக்குநர் ஷகீல் அக்தர் இன்று(அக்டோபர் 22) திருவெறும்பூர் காவல்நிலையத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வழக்கின் நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இதுவரை எந்த இறுதி முடிவுக்கும் வரவில்லை என்றார்.
மேலும்பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வருகிறோம். அதுகுறித்து தற்போதைக்கு எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என்று ஷகீல் அக்தர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக வழக்கில் என்ன நடந்தது என்பது பற்றி ஆராய வேண்டியதில்லை, கடந்த 6 மாதமாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து தான் குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
ராமஜெயம் கொலை வழக்கை மேற்பார்வையிட்டு வரும் சிபிசிஐடி இயக்குர் ஷகீல் அக்தர் இந்த மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார்.
அதற்குள் இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை தெரிவித்து விடுவீர்களா என்ற கேள்விக்கு, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று ஷகீல் அக்தர் பதிலளித்துள்ளார்.
கலை.ரா
ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றத் தடை? ஸ்டாலின் ஆலோசனை!
போக்குவரத்து ஓய்வூதியம்: அகவிலைப்படி உயர்வை வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்!