திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் ராமதாஸ் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “பாமகவின் நிறுவனர், தலைவர் நான்தான். என் தலைமையில் அமைவதுதான் பாமக கூட்டணி” என்று ராமதாஸ் நேற்று (ஜனவரி 8) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, “நான் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிக்கப் போவதில்லை. மருத்துவர் ராமதாஸ் எடுக்கும் முடிவுதான் எங்கள் முடிவு” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 9) ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “எனது மகள் காந்திமதி வருகின்ற தேர்தலில் போட்டியிடுவார். அதேபோல் ஜி.கே. மணியும் போட்டியிடுவார்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இடம்பெறுவீர்களா என்ற கேள்விக்கு, “அரசியலில் எது வேணாலும் நடக்கலாம்” என்றார்.
உங்கள் கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, “இந்தியாவில் யாரும் எங்களுக்கு பங்கு தரவில்லை.பாமக இரு அணி கிடையாது. ஒரு அணி மட்டுமே உள்ளது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அறிவிக்கப்படும். எங்களுடைய 20 அஜெண்டாக்களில் 10.5% இட ஒதுக்கீடு ஒரு அஜெண்டா. அது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேவைப்படும் பட்சத்தில் விருப்பமனு பெறப்படும் தேதி நீட்டிக்கப்படும்” என்றார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்” என்றார்.தவெகவுடன் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு, “உங்களுடைய கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்றார்.
