விஜய்யின் கூட்டணி அமைச்சரவையை வரவேற்ற ராமதாஸ்; ஆளுங்கட்சிக்கு வைத்த மிக முக்கிய ‘செக்’! பின்னணி என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

ramadoss

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், சமூக நீதி, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் மக்கள் நல முன்னேற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் விஜய் அரசு கவனம் செலுத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற அரசியல் நிலைப்பாட்டை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்த கட்சியாகும். அதிகாரம் ஒரே கட்சியில் மட்டுமே குவியாமல், பல்வேறு அரசியல் சிந்தனைகளுக்கும் சமூகப் பிரதிநிதித்துவத்திற்கும் இடமளிக்கும் ஆட்சி முறைதான் ஜனநாயகத்தின் உண்மையான வடிவம் என்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது தமிழக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய பங்கு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அரசியல் முன்னேற்றமாகும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் மதித்து செயல்படுவது ஜனநாயகத்திற்கு வலுசேர்க்கும். ஆட்சி என்பது ஒரே கட்சியின் விருப்பப்படி நடைபெறுவது அல்ல; கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் அனுபவமும், கருத்தும், மக்கள் நலப் பார்வையும் இணைந்தால் மட்டுமே நல்லாட்சியை வழங்க முடியும். கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பு அமைச்சரவைப் பதவிகளில் மட்டும் முடங்கிவிடக் கூடாது. அரசின் கொள்கைகள் வகுப்பதிலும், மக்கள் நலத் திட்டங்களை திட்டமிடுவதிலும், நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதிலும், மாற்று ஆலோசனைகளை வழங்குவதிலும் அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். அதுவே கூட்டணி ஆட்சியின் உண்மையான நோக்கமாகும்.

கூட்டணி ஆட்சி என்பது அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல; அது பொறுப்புப் பகிர்வும் ஆகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், சமூக நீதி, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் மக்கள் நல முன்னேற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்தின் தற்போதைய கூட்டணி அமைச்சரவை ஜனநாயகத்திற்கும், அரசியல் நாகரிகத்திற்கும் நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். கூட்டணி அரசின் இந்த தொடக்கம் மக்கள் நலனுக்கான சிறந்த ஆட்சியாக மலர வேண்டும் என்பதோடு, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் வழிவகுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share