பாமகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தையும் நிறுவனருமான ராமதாஸுக்கும், மகனும் தலைவருமான அன்புமணிக்கும் இடையே நீயா நானா போட்டி தொடர்ந்து வரும் நிலையில், அக்கட்சி தொண்டர்கள் இந்த பக்கம் சாய்வதா அந்த பக்கம் சாய்வதா என்ற குழப்பத்திலேயே இருக்கின்றனர்.
இந்தசூழலில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தொடர்ந்து, ஜி.கே.மணி அளித்த பேட்டி பல்வேறு சந்தேகத்துக்கு வழிவகுத்தது. இதுதொடர்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு விளக்கமளித்துள்ளார்.
என்ன நடந்தது?
பாமகவுக்கு உரிமை கோரியும், மாம்பழம் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரியும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார் ராமதாஸ்.
இந்த கடிதத்துக்கு பதிலளித்து தேர்தல் ஆணையத்தின் உதவி செயலாளர் லவ் குஷ் யாதவ் ராமதாஸுக்கு கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், “அன்புமணியின் பதவி காலம் ஏற்கனவே 28.05.2025 அன்று முடிவடைந்து விட்டதாகவும், ராமதாஸ் 30.05.2025 முதல் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் 16.09.2025, 17.09.2025, 23.09.2025, 06.10.2025, 8.10.2025, 3.11.2025 மற்றும் 6.11.2025 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்கள் வந்தன.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின் படி நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் 2026 ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும்.
எனவே பாமகவின் தலைவராக அன்புமணி நீடிக்கிறார்.
நீங்கள் கட்சியின் தலைவர் என்று கூறிக் கொண்டால் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த கடிதத்தை தொடர்ந்து ராமதாஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
‘அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். அதனை தேர்தல் ஆணையமும் ஏற்று அவரை தலைவராக அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 4) நீதிபதி மினி புஷ்கர்னா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்பீர் சிங், ‘தேர்தல் ஆணையத்தின் முன் அன்புமணி தரப்பினர் உண்மையை மறைத்து தகவல்களை சித்தரித்துள்ளனர். அவரது பதவி காலம் மூன்று ஆண்டுகள் முடிந்து 2025 மே மாதம் காலாவதியாகிவிட்டது. 2022ல் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால் 2023 நடைபெற்றதாக அன்புமணி தரப்பு கூறியதை ஏற்று 2026 வரை அவரது பதவி தொடர்வதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் உண்மையான ஆவணங்களை சமர்ப்பித்த போதிலும், அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் தவறு செய்துவிட்டது.
ஒரு கட்சியின் தலைவர் பதவியை இரண்டு பேர் கேட்கும்போது அதில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அன்புமணி சார்பில், ‘பாமக நிறுவனரின் மனுவை நிராகரிக்க வேண்டும். அவருக்கு வயது 90 ஆகிவிட்டது. தங்கள் பிரிவுதான் உண்மையான பாமக’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நீதிபதி, ‘தேர்தல் ஆணையம் முழுமையான ஆவணங்களை கருத்தில் கொள்ளாமல் தவறு செய்துள்ளது என்று கூறுகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ராமதாஸ் தரப்பில், ‘ஆம்… தேர்தல் ஆணையம் முழுமையாக தவறு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் வேட்பாளர்களை அங்கீகரித்து யார் கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில், ‘பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு என்று தேர்தலுக்கு முன்பாக பட்டியல் வெளியிடப்படும். இரு தரப்பும் பிரச்சினைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் ஏற்றுக் கொள்ளாது. மாறாக கட்சியின் சின்னம் முடக்கி வைக்கப்படும். சட்டப்பூர்வமாக பிரச்சனை தீர்க்கப்படும் வரை கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ‘ பாமக அங்கீகரிக்கப்படாத கட்சி. இதில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. எனவே பாமக தலைவர் பிரச்சினையை சிவில் நீதிமன்றம் தான் விசாரிக்க முடியும்’ என்று கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
தேர்தல் ஆணையம் உத்தரவு ரத்தா?
இந்த சூழலில் அன்புமணி ராமதாஸை பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து ஜந்தர் மந்திரில் இன்று (டிசம்பர் 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ராமதாஸ் மகளும் கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீ காந்தி, பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி, ‘அன்புமணி பாமக தலைவர் என்று சொல்லி போலியாக ஆவணம் கொடுத்தது செல்லாது… ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி கூறி இருக்கிறார். ராமதாஸ் ஐயாவுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.
தேர்தல் ஆணையமே கொடுத்த உத்தரவை திரும்ப பெற்றிருக்கிறது.
அதாவது அன்புமணி சார்பில் 2026 வரை தலைவர் பதவி காலம் இருக்கிறது என்று போலியாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் நீதிமன்றத்தில் கூறினோம்.
அப்போது தேர்தல் ஆணையமும் அன்புமணி கொடுத்த ஆவணங்களை வைத்து அவரை தலைவர் என்று சொன்னோம். இப்போது அதை திரும்ப பெறுகிறோம் என்று சொல்லிவிட்டது.
இனி அன்புமணி பாமக தலைவர் என்று சொல்ல முடியாது. மாம்பழம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்து விட்டது” என்று கூறினார்.
வழக்கறிஞர் பாலு தந்த விளக்கம்
இன்றைய நீதிமன்ற உத்தரவு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் பாலு, ‘இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. உட்கட்சி பிரச்சனைகளை சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி 2026 வரை அன்புமணி தான் தலைவர் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு முடித்து வைக்கப்பட்டது’ என்று கூறினார்.
மேலும் அவர், “ஏற்கனவே ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், இதே கருத்தை தெரிவித்தது. இதை மேற்கோள் காட்டி, சிவில் நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரையை இதுவரை ராமதாஸ் தரப்பில் நிறைவேற்றவில்லை என்பதும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியை முடக்க வேண்டும் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்ற அவர்களின் முயற்சி இன்றைக்கும் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆனால் அவர்கள் வெற்றி பெற்று விட்டோம், சாதித்து விட்டோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள்.
என்ன சாதித்து விட்டார்கள்?
நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன, தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்ன, கட்சியின் விதி என்ன என்பதை மறந்துவிட்டு அவர்கள் செயல்படுகிறார்கள். தான்தோன்றித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. இருவருக்குமே அது சொந்தம் கிடையாது என்று சொல்கிறார்கள்.
ஒரு வழக்கறிஞராக நான் சொல்கிறேன், பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக எந்த வாதமும் முன் வைக்கப்படவில்லை. அதுபோன்று நீதிபதியும் எந்த உத்தரமும் பிறப்பிக்கவில்லை.
அதாவது 2025 ஜூலை மாதம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026 தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இது குறித்த விவாதம் அவர்கள் தரப்பிலும் எங்கள் தரப்பிலும் எழுப்பப்படவில்லை. நீதிமன்றமும் சின்னம் ஒதுக்குவது தொடர்பான பிரச்சனையில் நாங்கள் தலையிடவில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு ராமதாஸ் தரப்புக்கு கூறியது. அதை தவிர்த்து அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். எனவே டெல்லி உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்கட்சி பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தால் தலையிட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அப்படியானால் இதற்கு முன்பு அன்புமணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றதை எப்படி பார்ப்பது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு வழக்கறிஞர் பாலு, இன்றைய தேதியில் யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. ஏனென்றால், 2026 வரை தலைவர் பதவியை நீட்டித்து வழங்கிய கடிதம் இருக்கக்கூடிய நிலையில், அதில் தலையிட விரும்பவில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி விட்டது என்று பதில் அளித்தார்.
நான் தான் தலைவர் – அன்புமணி
இன்று வந்த உத்தரவை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ‘ சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசனும் இதே தீர்ப்பை தான் வழங்கினார். எந்தக் குழப்பமும் இல்லை. தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் நீடிப்பேன். மாம்பழ சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம் தொடரும்’ என்று கூறினார்.
இந்தசூழலில் தலைவர் பதவி தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக எதிர்கொள்ளவிருப்பதாக ராமதாஸ் தரப்பு கூறுகிறது.
