பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (ஆகஸ்ட் 9) அக்கட்சியின் பொதுக் குழுவை கூட்டிய நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாட்டை பூம்புகாரில் நடத்துகிறார்.
பாமகவில் அதிகாரப் போட்டியின் அடுத்த கட்டமாக அக்கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று மாமல்லபுரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமகவின் தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த பொதுக்குழுவுக்கு தடை கோரிய ராமதாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து பாமகவின் தாய் அமைப்பான வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாடு இன்று பூம்புகாரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. பாமகவில் தமக்கான ஆதரவு பலத்தை காட்டும் மாநாடாக ராமதாஸ் இதனை நடத்துகிறார்.
பாமக மகளிர் மாநாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு, மதுவிலக்கு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
