மாமல்லபுரத்தில் அன்புமணியின் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என ராமதாஸ் தரப்பு அறிவித்திருந்தது. ஆனாலும் தற்போது பாமக பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்தி வருகிறார்.
அன்புமணியின் பாமக பொதுக் குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த மனு நேற்று ஆகஸ்ட் 8-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று இரவு தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தந்தை- மகன் இடையேயான ஈகோ பிரச்சனையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அன்புமணி கூட்டும் பொதுக் குழு சட்டவிரோதம் என்கிறது ராமதாஸ் தரப்பு. ஆனால் முறையாக பொதுக் குழு கூட்டப்படுகிறது என்கிறது அன்புமணி தரப்பு.
தற்போதைய ரிட் வழக்கில், பாமக பொதுக் குழு சட்டப்படியானதுதானா? என்பதை விசாரிக்க முடியாது. ஆகையால் உரிமையியல் நீதிமன்ற்த்தில் சிவில் வழக்கு தொடரலாம். அன்புமணி பொதுக் குழுவை கூட்டுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை போலீசார் முறையாக கையாள வேண்டும். அன்புமணி பொதுக் குழுவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து அன்புமணி பொதுக் குழுவுக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இன்று ராமதாஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வோம் என அவரது வழக்கறிஞர் கோபு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பாமகவின் பொதுக் குழு கூட்டத்தை அன்புமணி திட்டமிட்டபடி மாமல்லபுரத்தில் நடத்தி வருகிறார்.
