மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 வழங்குக: ராமதாஸ்

Published On:

| By Balaji

நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குறைந்தது ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால், சென்னையும், டெல்டா மாவட்டங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. டெல்டா பகுதிகளில் 1.5. லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் வெள்ளக் காடாக உள்ளது.

ADVERTISEMENT

தற்போது மழை ஓய்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

அவர் இன்று (நவம்பர் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையும், தமிழகத்தின் பிற மாவட்டங்களும் மழையின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளவில்லை. சென்னையில் சனிக்கிழமை தொடங்கிய மழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் பல பகுதிகளில் வடியவில்லை. காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் பெய்த மழையால் பல லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பல வகையான பயிர்கள் சேதமடைந்து விட்டன.

ADVERTISEMENT

மழை – வெள்ளம் காரணமாக ஆறுகளில் கட்டப்பட்டிருந்த அணைகள், தடுப்பணைகள் பல இடங்களில் உடைந்து விட்டன. பல்லாயிரம் கி.மீ தொலைவுக்குச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இவை அனைத்தையும் அரசு விரைந்து சீரமைக்க வேண்டும். குறிப்பாகச் சென்னை மாநகரின் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015-ஆம் ஆண்டில் சந்தித்ததை விட மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. வட சென்னை, தென்சென்னை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் மழை – வெள்ள நீர் தேங்கிக் கிடக்கிறது. வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்று கூறப்பட்ட பகுதிகளில் கூட மக்களால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை.

ADVERTISEMENT

குடிநீர், பால், காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆறு நாட்கள் நீர்ச்சிறையில் அடைபட்டுக் கிடப்பது உளவியல் ரீதியாகவும் கொடுமையானது. சென்னையின் பல பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுவதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு மாநகராட்சியும், தமிழக அரசும் நீர்ச்சிறையிலிருந்து விடுதலை தர வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டும் சம்பா பருவத்தில் காலம் தவறிப் பெய்த மழையால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. நடப்பு சம்பா பருவம் வெற்றிகரமாக அமைந்தால் தான் அவர்களால் இழப்பை ஈடு செய்ய முடியும். ஆனால், நடப்பு சம்பா பருவத்திலும் கனமழையால் அவர்களுக்கு இழப்பு தான் ஏற்பட்டிருக்கிறது. அதை தமிழக அரசும் உணர்ந்து பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவைக் காவிரி டெல்டாவுக்கு அரசு அனுப்பி வைத்திருக்கிறது. அமைச்சர்கள் குழுவினர் ஆய்வை விரைவாக முடித்துப் பாதிக்கப்பட்ட உழவர்கள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னையிலும், பிற பகுதிகளிலும் தொடர்ந்து பெய்த மழை பெரும்பான்மையான குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்புகளையும், உடைமை இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குறைந்தது ரூ.5,000 நிதியுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share