தமிழ் புலவர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னோடு தங்கும் விடுதியில் இருந்த ஒருவர் இவ்வளவு மதிப்பெண் வாங்கியிருக்கிறாய். நீ மருத்துவர் ஆகலாமே என்று சொன்னதன் பெயரில் தான் நான் மருத்துவம் படித்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டி பிப்ரவரி 21 முதல் 28 வரை தமிழை தேடி என்ற பரப்புரையை சென்னை முதல் மதுரை வரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பரப்புரையை துவங்கினார். நேற்று இரவு மறைமலைநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இன்று புதுச்சேரியில் தமிழை தேடி பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசும்போது, “சென்னையை விட புதுச்சேரியில் அதிக தமிழ் சங்கங்கள் உள்ளன. அதற்காக தமிழறிஞர்களை பாராட்ட நான் கடமை பட்டிருக்கிறேன். பாரதியார் விடுதலை உணர்வையும் பாரதிதாசன் தமிழ் உணர்வையும் ஏற்படுத்தினார்.
தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் பிற மொழி கலப்பு குறைவாக உள்ளது. சிங்கப்பூரில் தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாய பாட சட்டமாக இயற்றப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்த வெங்கட்ராமன், அப்துல் கலாம், மத்திய மற்றும் மாநில அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் தமிழக முதல்வராக இருந்த அண்ணா ஆகியோர் தமிழ் வழியில் படித்தவர்களே. நானும் தமிழ் வழியில் தான் படித்தேன்.
நான் தமிழ் புலவர் ஆக வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னோடு தங்கும் விடுதியில் இருந்த ஒருவர் இவ்வளவு மதிப்பெண் வாங்கியிருக்கிறாய். நீ மருத்துவர் ஆகலாமே என்று சொன்னதன் பெயரில் தான் நான் மருத்துவம் படித்தேன். நான் மருத்துவம் படிக்கும் போது எல்லாமே கிரேக்கம் மற்றும் லத்தீன் வார்த்தைகள் தான்.
உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் தமிழில் பேச சொல்லுங்கள். எப்படியாவது தமிழை நாம் காப்பாற்ற வேண்டும். உலகிலேயே மூத்த மொழி தமிழ் தான். இந்த மூத்த மொழியை நாம் இழந்துவிட்டால் நமக்கு அடையாளமே இல்லை. தமிழுக்காக தமிழை மீட்பதற்காக நாம் போராடுவோம்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
“இனிதான் எடப்பாடியின் வேகத்தைப் பார்க்கப்போகிறீர்கள்”: சி.விஜயபாஸ்கர்
