பாமக பொதுக்குழுவில் தேர்தல் உத்திகள், எந்த கூட்டணியில் சேருவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 26) தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ராமதாஸ், “கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து தன்னலம் கருதாது மக்களுக்கு தொண்டாற்றிய, கட்சியை வளர்த்தவர்களுக்கு நல்ல பொறுப்புகளை கொடுத்திருக்கிறேன். இந்த பொறுப்பு தற்காலிகமானதல்ல, நிலைத்து நீடித்து இருக்கும் என்றும் அவர்களுக்கு உறுதியளித்திருக்கிறேன். Ramadoss says take important decision
முருகன் மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. இந்த மாநாட்டில் தமிழ்நாடு மக்களுக்கு தொண்டாற்றிய, மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்தியது வருத்தமளிக்கிறது. மறைந்த தலைவர்கள் யாரையும் எந்த அரசியல் கட்சிகளும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
பாமகவில் நிர்வாக குழு, மாநில செயற்குழு கூட்டம் நடத்தி, நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்படும். பின்னர் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். பொதுக்குழுவில் தேர்தல் உத்திகள், எந்த கூட்டணியில் சேருவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
பதவி சுகத்திற்காக நான் என்றைக்கும் ஆசைப்பட்டது கிடையாது. எந்தவிதமான அரசு பதவியிலும் இருக்கக்கூடாது என்பது நான் எடுத்துக்கொண்ட சத்தியம்.
பாமக நிர்வாகிகள் பலரை எம்.எல்.ஏ, எம்.பி., மத்திய அமைச்சர்களாக உருவாக்கியிருக்கிறேன். ஆனால், பாமக என்ற கட்சியை தனி ஒரு மனிதனாக சுயம்புவாக உருவாக்கினேன். அதனால் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
