பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது. இருவருக்கும் இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்ததாக நேற்றைய (ஜூன் 12) செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் மூச்சுக்காற்று நிற்கும் வரை நான் தான் பாமகவின் தலைவர், நிறுவனர் என்று தெரிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
“பாமகவை தொய்வில்லாமல் நடத்த ஆதரவு பெருகியுள்ளது. குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வர கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன் அதனை காப்பாற்ற முடியவில்லை
செயல் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வது தான் எனக்கும் அன்புமணிக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக அமையும். இதுதொடர்பாக செய்தியாளர்கள் அன்புமணியிடம் கேட்டால், நான் செயல் தலைவராகவே தொடர்வேன் என்பார். ஆனால், அவரது பேச்சு ஒன்றாக இருக்கும், செயல்பாடு ஒன்றாக இருக்கிறது. அன்புமணியை பார்த்தால் எனக்கு மனக்குமுறலும் ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது.
பாமகவை சுயம்புவாக நான் உருவாக்கினேன். ஆனால், எனக்கே அன்புமணி கட்டளையிடுகிறார். கட்டளை போட அவர் யார்? என் மூச்சுக்காற்று நிற்கும் வரை நான் தான் தலைவர், நிறுவனர்.
இளைஞரணி தலைவர் மற்றும் இன்னும் சில பதவிகள் காலியாக இருக்கிறது. அந்த பதவிகள் விரைவில் நிரப்பப்படும். பாமக பொதுக்குழு செயற்குழுவை விரைவில் கூட்ட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தந்தை, மகன் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், ஜூன் 15-ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் அன்புமணி. இந்தசூழலில், ராமதாஸின் பெயர் மற்றும் புகைப்படத்தை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸ் உத்தரவு போடப்போகிறார் என்கிறார்கள் தைலாபுரம் வட்டாரத்தில். ramadoss says i am pmk president