பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் நீக்கி வருகிறார். ஆனால், அவர்கள் அப்பதவியிலேயே தொடர்வதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார். ramadoss removed vadivel ravanan
இந்தநிலையில், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் இன்று (ஜூன் 15) அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக முரளி சங்கரை பாமக பொதுச்செயலாளராக நியமித்திருக்கிறார். இவர் பாமக மாணவரணி செயலாளராக இருந்தவர். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை காணவில்லை. செவன் ஸ்டார் ஓட்டலில் அவர் இருப்பதாக சொல்கிறார்கள். அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 100 ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
ராமதாஸுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவேல் ராவணன் வெளியிட்ட வீடியோவில், “பாமகவில் பொதுச்செயலாளராக இருந்தாலும், சாலையோர கடைகளில் தான் தேநீர் அருந்துகிறேன். உண்மையான பாட்டாளியாக இருக்கும் நான் ஸ்டார் ஹோட்டலுக்கு செல்வதில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பனையூரில் அன்புமணி தலைமையில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வடிவேல் ராவணன் பங்கேற்றிருந்தார். இன்றைய தினம் திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்திலும் வடிவேல் ராவணன் பங்கேற்றுள்ளார். இந்தநிலையில், வடிவேல் ராவணின் பொதுச்செயலாளர் பொறுப்பை பறித்துள்ளார் ராமதாஸ். ramadoss removed vadivel ravanan