சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜகவின் அதிகார மையமான ஆடிட்டர் குருமூர்த்தியை இன்று சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ராமதாஸ் பேரன் முகுந்தன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. Ramadoss Meets Gurumurthy
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்ததால் பாமக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவின் மேலிட தூதர்களாக ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் டாக்டர் ராமதாஸை அண்மையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை வந்த டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க இருப்பதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதன்படி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது பேரன் முகுந்தன் வீட்டில், ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் பாமகவில் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண்பது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவது உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.