அன்புமணியை நீக்கிய ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என்று பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 11) தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் அந்தித்த ராமதாஸ், “16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்காததால் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என கருத்தப்படுகிறது.
எனவே, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவருடைய நடவடிக்கை மற்றும் போக்கு மிகப்பெரிய குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்தார்.
ராமதாஸின் அறிவிப்பு அன்புமணி தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ராமதாஸின் நடவடிக்கை தொடர்பாக அன்புமணி தரப்பைச் சேர்ந்த பாமக வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், ”கட்சி சட்டத்தின் படி கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் என்பது பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், செயலாளர், பொருளாளருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
கட்சியின் நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் வழங்கப்படவில்லை. பதவி நீக்கம் செய்வது, கூட்டம் நடத்துவது என எந்த முடிவாக இருந்தாலும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.
இன்றைக்கு டாக்டர் வெளியிட்டிருக்க கூடிய அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது. பாமகவை ராமதாஸின் எந்த அறிவிப்பும் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தேர்தல் நெருங்கி வரக் கூடிய வேளையில் கட்சியில் அமைப்புத் தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லை என கூறி கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரின் பதவி காலத்தை2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு பொதுக்குழுவின் முடிவுகளை அனுப்பி வைத்தோம். எங்களுடைய மனுவை, விளக்கத்தை ஆய்வு செய்து பாமக தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்காலத்தை பொதுக்குழுவின் தீர்மானத்தின் படி அடுத்த 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் பாமக தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் இருக்கிறார்கள்.
ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு என்பது கட்சியின் அமைப்பு விதிகளின் படியும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையிலும் செல்லத்தக்கது அல்ல. நாங்கள் கட்சியின் விதிகளின் படிதான் செல்கிறோம். பாமக நிறுவனர் என்றாலும் நிர்வாக அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.
எனவே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான்.
இதைத்தவிர நான்தான் தலைவர், பொருளாளர், செயலாளர் என்று அறிவிப்பு வெளியிடுவது கட்சி விதிகளுக்கு எதிரானது. தேர்தல் ஆணைய உத்தரவுக்கும் எதிரானது.
பாமக நிர்வாகிகள் என்ற அடிப்படையில் நீங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது” என்றார்.
கேள்வி பதில்
தலைவர் பதவிக்கு அன்புமணி தகுதியானவர் அல்ல? தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவருடைய கருத்துகளுக்கு நான் பதில் சொல்வது முறையாக இருக்காது.
அன்புமணி உளவு பார்ப்பதாக சொல்லியிருக்கிறாரே?
அன்புமணிக்கு உளவு பார்க்க கூடிய பழக்கம் கிடையாது. அதில் விருப்பமும் கிடையாது. ஒருவேளை அன்புமணி உளவு பார்த்திருந்தால் இப்படி ஒரு சூழல் எழுந்திருக்காது. அவர் உளவு பார்க்கிறார் என்பது தவறு.
மீண்டும் இணைய வாய்ப்பே இல்லையா?
எதிர் காலத்தில் என்ன நடக்கும் என இன்றைக்கு கணிக்க முடியாது.
தனி மனிதனாக உருவாக்கப்பட்ட கட்சி பாமக… இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது? என்று சொல்லியிருக்கிறாரே?
1989ல் மருத்துவரின் சீரிய முயற்சியில் பாமக தொடங்கப்பட்டது. இதுஒரு ஜனநாயக இயக்கம். இதை அவரே சொல்லியிருக்கிறார். ஜனநாயக இயக்கத்தில் கட்சியின் பொதுக்குழு செயற்குழு எடுக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையிலும், கட்சி விதிகளின் அடிப்படையிலும் தான் நாங்கள் செயல்பட முடியும். எனவே நாங்கள் கட்சியின் விதிகளின் படி செயல்படுகிறோம். அமைதியாக நிதானமாக இப்போது நிலவும் குழப்பங்களை கையாண்டு வருகிறோம்.
இன்றைய நிலையில் அதிகாரமும் அங்கீகாரமும் எங்களிடம் இருக்கிறது.
