சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பாமகவுக்கு உரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கட்சியை அன்புமணி அபகரித்துவிட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் பாமகவினர் உரிமையியல் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இந்நிலையில் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், பாமக தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மற்றொரு ரிட் மனுவில், பாமகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாஸுக்கே அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கிடையே இரு தரப்பினரும் தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர். அன்புமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
அதுபோன்று இரு தரப்பினரும் தனி தனியே விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இதுவரை 4,109 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுபோன்ற சூழலில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் ஓரிரு நாட்களில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
