டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வீசப் போகும் அணுகுண்டு – இனி தமிழ்நாடு முழுவதும் யுத்தம்?

Published On:

| By vanangamudi

வைஃபை ஆன் செய்ததும் பாமகவில் அப்பா- மகன் இடையே இதுநாள் வரை அறைகளுக்குள் நடந்த யுத்தம் இனி தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பகிரங்கமாக வெடிக்கப் போகிறதோ? என்கிற கேள்வியுடன் மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Ramadoss and anbumani plans

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் – அவரது மகன் அன்புமணி இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொண்ட அத்தனை சமாதான முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. ராமதாஸின் மகள்கள் ஶ்ரீகாந்தி, கவிதா மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி உள்ளிட்டோர் மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் பலன் தரவில்லை. ராமதாஸ் வார்த்தைகளில் சொன்னால் ‘டிரா’வாகிப் போனது!

ADVERTISEMENT

இதனையடுத்து அன்புமணியை முன்னைவிட மிகக் கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், புதிய நிர்வாகிகள் நியமனங்கள், நாள்தோறும் கட்சியினரின் சந்திப்புகள் என வழக்கம் போல ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார்.

பாமகவில் அன்புமணி ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டு ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாவட்ட, மாநில நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை ஜூன் 15-ந் தேதி புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் டாக்டர் அய்யா சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பது பற்றியும் அன்புமணிக்கு பதிலாக புதிய தலைவரை நியமிப்பதற்காக பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் விவாதிக்கலாம் என்கின்றன தைலாபுரம் வட்டாரங்கள்.

இதனிடையே தைலாபுரம் தோட்டத்தில் இன்று புதிய ட்விஸ்ட் அரங்கேறி இருப்பதும் பாமக வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

ADVERTISEMENT

சென்னை மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட கட்சியினர் இன்று தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அப்படி ராமதாஸால் இன்று புதியதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் சிலர், தைலாபுரம் தோட்டத்தில் இருந்த ராமதாஸின் மூத்த மகள் ஶ்ரீகாந்தியை சந்தித்து ‘ஆசி பெற்று’ போட்டோ எடுத்துள்ளனர்.

சரி.. அப்பாவுக்கு எதிராக மகன் என்ன வியூகம் வகுத்துள்ளாராம்?

அந்த தகவலுக்கு முன்னதாக, இதுநாள் வரை புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு வரும் அறிக்கைகளின் கீழே நகல், செயல் தலைவர் அன்புமணி என்றும் இடம் பெற்றிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.

பாமகவின் தலைவர் தாமே என பிடிவாதமாக இருக்கும் டாக்டர் அன்புமணி, நேற்று ஜூன் 13-ந் தேதியன்று பாமக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று பாமகவின் மாநில நிர்வாக குழுக் கூட்டத்தையும் கூட்டினார் அன்புமணி.

டாக்டர் அன்புமணி கூட்டிய இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ஒருகாலத்தில் ராமதாஸின் வலதுகரமாக இருந்த தீரன், எம்.எல்.ஏ. சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அன்புமணி நேற்றும் இன்றும் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பேசுகையில், அய்யா பற்றி சோசியல் மீடியாவில் யாரும் விமர்சிக்க வேண்டாம். அய்யாதான் நமக்கு குலசாமி. அதனால் அந்த தப்பை யாரும் செஞ்சுட கூடாது. தலைவர் யார் என்பதில் உங்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம்.

ஏன்னா தேர்தல் ஆணையம் நமக்கு ஏற்கனவே கடிதம் வழங்கி இருக்கிறது. அதில், 2026-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி வரை பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவர் இந்த அன்புமணிதான் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் சொல்றேன். தலைவர் யார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை குழப்பமும் இல்லை என திட்டவட்டமாக கூறினாராம்.

மேலும், நம்ம அய்யாவின் பிறந்த நாள் ஜூலை 25-ந் தேதி. அன்றைக்குதான் நாம நடைபணத்தை தொடங்குகிறோம். இந்த நடைபயணத்தில் அய்யாவை புகழ்ந்தும் அவரோட சாதனைகளை சொல்லியும் பேசுவோம். நம்ம கட்சியை பலப்படுத்தனும். புதிய உறுப்பினர்களை சேர்க்கனும். அதில்தான் கவனமாக இருக்கனும் என்றும் அறிவுரை வழங்கினாராம் அன்புமணி.

ஆக, அப்பாவும் மகனும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் போகிறார்கள். அப்ப களேபரம் கன்பார்ம்? என்ற கேள்விக்கு வரும் நாட்களில்தான் விடை இருக்கிறது.

இந்த பரபரப்புகளுக்கு நடுவே, தம்முடைய பெயரையோ படத்தையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்கிற ஒரு தீர்மானத்தை விரைவில் டாக்டர் ராமதாஸ் நிறைவேற்ற இருப்பதாகவும் தைலாபுரம் தகவல்கள் தெரிவிக்கின்றன என அணுகுண்டு வீசியபடியே சென்ட் பட்டனைத் தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். Ramadoss and anbumani plans

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share