நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை களைகட்டியிருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ramadon celebration political leaders wishes
நேற்று பிறை தென்பட்டதால் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் காலையிலேயே மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகை செய்து ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிலையில் இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
பிரதமர் மோடி
இந்த பண்டிகை நமது சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வை அதிகரிக்கட்டும். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் காணட்டும்.
முதல்வர் ஸ்டாலின்
இசுலாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
“எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கிவிட்டார்கள்; உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்” என்று தன் அன்பர்களுக்குக் கூறியவர் நபிகள் பெருமான்.
பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாகக்கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் அவர்.
பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமானார்.
“தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு” என்று உழைப்பை மதித்திடும் உத்தமப் பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவர்.
மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மார்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறார்கள். அத்தகைய நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, இரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இசுலாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்’ என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
காய்ந்த குடல்கள், காலியான வயிறு, பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு, என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
இல்லாத ஏழைகள் வாழ்வில் ஏற்றம் பெற உதவும் இஸ்லாமியர்களை இத்திருநாளில் வாழ்த்துவோம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கவும், செழிப்பை
அளிக்க கூடிய நன்னாளாக, இந்த ரமலான் தினம் அமையட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ramadon celebration political leaders wishes