ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது என்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் இன்று (பிப்ரவரி 27) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 23-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம், ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கடிதம் எழுதினார்.

இந்தநிலையில், அதிமுக அடிப்படை உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன், ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை அங்கீகரிக்கக்கூடாது என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி திருத்த விதிகளின்படி, எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடும் வகையில் உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

அண்மையில் உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அளித்த தீர்ப்பில் ஜூலை 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சிவில் வழக்கை தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்