மாநிலங்களவையில் வந்தே மாதரம் தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இடையே காரசார விவாதம் நடந்தது.
வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் இன்று டிசம்பர் 9-ந் தேதி நடைபெற்ற விவாதத்தில் திமுகவின் திருச்சி சிவா பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கஸ்தூரிபா காந்தி, கமலா நேரு உள்ளிட்டோர் பெயர்களில் சாலைகள், திடல்கள், மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் உள்ளன; ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களில் சாலைகள் எதுவும் வடநாட்டில் இல்லை; தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் வட இந்தியாவின் நினைவுகூரப்படுவதில்லை.. ஆகையால் நாட்டின் பிற பகுதி மக்களும் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி தெரிந்து கொள்ள சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் அவர்களைப் பற்றி இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார். மேலும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்களிப்புகளையும் திருச்சி சிவா விவரித்தார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன், 20 ஆண்டுகள் காங்கிரஸ்- திமுக ஆட்சியில் ஏன் இதைச் செய்யவில்லை? தவறான வரலாற்றை திருச்சி சிவா சொல்வதாக ஆவேசமாக விமர்சித்தார்.
இதற்கு திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, |”தம்பி உட்காருங்க.. மத்திய அமைச்சர் உட்காருங்க” என திருச்சி சிவா கூறினார். அதே நேரத்தில் ‘யோவ் உட்காருய்யா’ என்ற தமிழ் குரலும் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து வெளிப்பட்டது.
இதனையடுத்து மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலையிட்டு சமாதானப்படுத்தினார். இதனால் மாநிலங்களவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
