தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று நாங்கள் சொன்னோமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். Rajya Sabha seat for DMDK
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் 2,025 பேர் இன்று (மார்ச் 4) அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், 2026 தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது தொடர்பாக செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “நான் நேற்றே சொல்லிவிட்டேனே. திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். திமுக தான் எங்கள் ஒரே எதிரி. திமுகவை வீழ்த்துவதுதான் எங்களது ஒரே குறிக்கோள்” என்றார்.
அவரிடம் தொடர்ந்து பாஜக கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால், “பாஜக… கீஜாக-வை எல்லாம் விடுங்கள். வேறு எதையாவது கேளுங்கள். எல்லாமே யூகத்தின் அடிப்படையில் கேட்கிற கேள்வி. யார் யாரெல்லாம் அங்கிருக்கிறார்கள்… யார் யாரெல்லாம் இங்கிருக்கிறார்கள் என்பதெல்லாம் 6 மாதத்துக்கு முன்னதாக சொல்லப்படும். இதில் மறைத்து எதையும் செய்யப்போவதில்லை. எல்லாம் வெட்ட வெளிச்சமாக நடக்கும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ” கூட்டணி பேச்சை எல்லாம் விட்டுவிடுங்கள். தேவையில்லாத கேள்வி கேட்காதீர்கள். நாங்கள் கொடுக்கிறோம் என்று சொன்னோமா. யார் யாரோ சொல்வதை வைத்து எங்களிடம் கேட்காதீர்கள். 2024ல் எங்களது தேர்தல் அறிக்கை வந்ததுதானே. அதை படித்துவிட்டு வந்து பேசுங்கள்” என்றார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார். Rajya Sabha seat for DMDK