மாநில அரசியல் மட்டுமல்லாமல் தேசிய அரசியலை தீர்மானிக்கக்கூடிய தலைவராக கலைஞர் இருந்தார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆகஸ்ட் 18) தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நூற்றாண்டு 100 ரூபாய் நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியபோது,
“கலைஞர் நினைவு நூற்றாண்டு நாணயத்தை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தை தாண்டி செல்வாக்கு மிக்க ஒரு நபராகவும், இந்திய அரசியலின் டைட்டனாகவும் இருந்தவர் கலைஞர்.
மக்களுக்கான அவரது பங்களிப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டது. கலைஞரின் அரசியல் வாழ்க்கை என்பது விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் மக்களுடன் பின்னிப்பிணைந்தது ஆகும்.
ஐந்து முறை அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் எளிய மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். அவர் மாநில தலைவர் மட்டுமல்ல தேசிய அரசியலை தீர்மானிக்கக்கூடிய தேசிய தலைவர்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக அவர் செயல்பட்டது கிடையாது. கூட்டாட்சி தத்துவத்திற்காக பாடுபட்டவர். வேற்றுமையில் ஒற்றுமையை கலைஞர் பேணிக்காத்தார்.
சுதந்திரத்திற்கு பிறகு 1960-ஆம் ஆண்டு காலகட்டத்தில் கலைஞர் முக்கியமான அரசியல் தலைவராக உருவெடுத்தார். அந்தகாலகட்டத்தில் பஞ்சாப் முதல் தமிழகம் வரை மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சியமைக்க முயற்சிகள் மேற்கொண்டன.
ஆனால், அந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகள் பலவும் தற்போது அழிந்துவிட்டன. ஆனால், திமுகவுக்கு மிகவும் ஆழமான அரசியல் அடித்தளம் அமைத்ததால் இன்று வரை ஆட்சி செய்யக்கூடிய கட்சியாக இருக்கிறது.
1973-ஆம் ஆண்டுக்கு முன்பு அந்தந்த மாநில ஆளுநர்கள் தான் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் தேசியக்கொடி ஏற்ற முடியும். ஆனால், இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றும் உரிமையை கலைஞர் பெற்று தந்தார்.
ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் கலைஞர். இந்தியாவிலும், தமிழகத்திலும் அரசியல் சூழலை தீர்மானித்தவர் கலைஞர்.
கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருப்பினும், வாஜ்பாய் அரசாங்கம் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு கலைஞர் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் கலைஞர் நட்பாக இருந்தார். கூட்டணிக்காக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் கட்சி எல்லைகளை தாண்டி நட்பு பாராட்டினார்.
பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்டோர் என சமூகத்தின் விளிம்புநிலையில் மக்களுக்காக கலைஞர் பாடுபட்டார். சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாது, எழுத்தாளர், நாடக ஆசிரியர் என தமிழ் இலக்கியம், சினிமாவிற்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார். இளைஞர்கள் கலைஞரிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிவ்தாஸ் மீனா மாற்றம்: புதிய தலைமைச் செயலாளராகிறார் முருகானந்தம்?
“நாணயமிக்க கலைஞருக்கு நூற்றாண்டு நினைவு நாணயம்” – ஸ்டாலின்