முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளான மே 21-ல் சமூக வலைதளங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருக்கமாகப் பேசிய வீடியோ ஒன்று அதிகமாகப் பகிரப்பட்டது. Rajiv Gandhi Saved My Life-Vajpayee
அந்த வீடியோவில், தாம் உடல்நலன் பாதிக்கப்பட்ட போது அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய குழுவில் தம்மையும் இணைத்து அமெரிக்காவில் அரசு செலவில் சிகிச்சை பெற உதவி செய்தவர் ராஜீவ் காந்தி என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் வாஜ்பாய்.
பின்னணி என்ன?
1984-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், இந்திரா காந்தி படுகொலை அனுதாபத்தால் காங்கிரஸ் கட்சி 414 இடங்களைப் பெற்று ராஜீவ் காந்தி பிரதமரானார். அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மாதராவ் சிந்தியாவை எதிர்த்து குவாலியர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக நிறுவனர் வாஜ்பாய் தோல்வி அடைந்தார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாய் பதவி வகித்தார்.
1988-ம் ஆண்டு இந்திய அரசின் குழு, ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்துக்கு செல்ல இருந்தது. அப்போதுதான் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, வாஜ்பாயை அழைத்து அமெரிக்கா செல்லும் இந்திய குழுவில் அவரையும் இணைத்து அமெரிக்காவில் உரிய சிகிச்சை பெற்று திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
The Untold Vajpayee: Politician and Paradox என்ற புத்தகத்தில் பத்திரிகையாளர் Ullekh NP-ம் இந்த தகவலை பதிவு செய்துள்ளார். ராஜீவ் காந்தியின் மனிதாபிமான உதவி தொடர்பாக வாஜ்பாய் கூறியதாக அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாவது: ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது என்னை அழைத்து, என்னுடைய சிறுநீரகப் பிரச்சனை குறித்தும் அதற்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டிய தேவை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் ஒருநாள் ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போதுதான், அமெரிக்காவில் ஐநா கூட்டத்துக்கு செல்லும் இந்திய அரசின் குழுவில் நானும் சேர்க்கப்பட்டுள்ளேன் என தெரிந்தது. என்னுடைய சிகிச்சைக்காகவே ஐ.நாவுக்கான அரசின் குழுவில் நான் சேர்க்கப்பட்டேன் என்பதையும் புரிந்து கொண்டேன். அன்று நியூயார்க் நகரில் எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால்தான் உயிர் பெற்றேன். இவ்வாறு அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தருணத்தில் டிவி சேனல்களுக்கு அளித்த பேட்டியில் வாஜ்பாய் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்திருந்தார். இந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
