திமுக மாணவரணியில் திடீர் மாற்றம்… ஏன்?

Published On:

| By Selvam

திமுக மாணவரணி தலைவர் மற்றும் செயலாளரை மாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 12) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Rajiv Gandhi Ezhilarasan position changed

அதன்படி, திமுக மாணவரணி தலைவராக பொறுப்பு வகித்து வரும் ராஜீவ் காந்தி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, கடந்த 2021-ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு மாணவரணி தலைவராக நியமிக்கப்பட்டார் ராஜீவ் காந்தி.

நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் இளைஞர்கள் பலரை திமுகவில் இணைக்கும் முயற்சியில் ராஜீவ் காந்தி தொடர்ந்து செயல்பட்டு வந்தார். சமீபத்தில் கூட அண்ணா அறிவாலயத்தில் ராஜீவ் காந்தி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மாற்று கட்சியினர் இணையும் விழாவில் ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

இந்தநிலையில், மாணவரணியில் நடைபெற்றுள்ள இந்த திடீர் மாற்றம் குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்,

“ஆரம்பத்தில் இருந்தே ராஜீவ் காந்தியும், எழிலரசனும் ஒத்த கருத்துடன் இருந்ததில்லை. இருதுருவங்களாக செயல்பட்டு வந்தனர்.

யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கலந்துகொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று விளக்கமளித்தார்.

இருப்பினும் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வந்ததால், ஒரே உறையில் இரண்டு கத்திகள் வேண்டாம் என்று ராஜீவ் காந்தியை மாணவரணி செயலாளராகவும், எழிலரசனை கொள்கை பரப்பு செயலாளராகவும் ஸ்டாலின் நியமித்துள்ளார்” என்கிறார்கள். Rajiv Gandhi Ezhilarasan position changed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share