#25YearsOfPadayappa: ரஜினிக்கு ஜோடியாக நக்மா… வில்லியாக மீனா… ‘படையப்பா’ சுவாரஸ்யங்கள்!

Published On:

| By Manjula

ஆண்டுகள் பல கடந்தாலும் சில திரைப்படங்கள் மட்டும் நம் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும். எப்போது அதனைப் பார்க்க நேர்ந்தாலும், புது உற்சாகம் பொங்கும். அதற்குக் காரணம், நமது வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக அத்திரைப்படம் பிணைந்து போனதுதான்.

அந்தப் பருவத்தில் அது ஏற்படுத்திய ரசாயன மாற்றம் தன்னையுமறியாமல் நிகழும் ஒரு அற்புதம். அப்படி நம்மைக் கவர்ந்த படங்களில் ஒன்று ‘படையப்பா’. இதன் வெற்றிக்கு நிகராக இன்னொரு வெற்றியை ரஜினி தரவில்லை என்று சொல்லும் அளவுக்கு, ஆழமானதொரு தடத்தைத் தமிழ் திரையுலகில் பதித்த படம் அது.

மீண்டும் ரஜினியுடன்

1995ஆம் ஆண்டு தீபாவளி விருந்தாக, ரஜினியுடன் இணைந்து ‘முத்து’ படத்தைத் தந்தார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அதன் வெற்றியைத் தொடர்ந்து பிரபுவுடன் ‘பரம்பரை’, கமலுடன் ‘அவ்வை சண்முகி’, விஜயகாந்த் உடன் ‘தர்மசக்கரம்’, கார்த்திக் உடன் ‘பிஸ்தா’ படங்களில் பணியாற்றினார். ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான வெற்றிகளைப் பெற்றன.

1998ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் ‘கொண்டாட்டம்’, ‘நட்புக்காக’ என்று இரு படங்கள் வெளியாகின. அதற்கு முந்தைய ஆண்டில் நிகழ்ந்த பெப்சி வேலை நிறுத்தம் காரணமாக ‘கொண்டாட்டம்’ படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இல்லையென்றால், அந்த வரிசையில் ஓரிரு படங்கள் கூடுதலாக இடம்பெற்றிருக்கலாம். மேற்சொன்னதில் இருந்தே அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்றத் துடித்தது தெரிய வரும்.

அந்த வகையில் ரஜினியுடன் மீண்டும் இணைந்து ‘படையப்பா’வைத் தரப்போவதாகக் கூறினார் கே.எஸ்.ரவிக்குமார். 1997 டிசம்பர் மாதம் இந்த அறிவிப்பு வெளியானது. அந்த காலகட்டத்தில், அவர் சரத்குமார் நடித்த ‘நட்புக்காக’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

அது நிறைவுற்றதும் ரஜினியுடன் படப்பிடிப்புக்காகச் செல்வதாகத் திட்டம். ஆனால், ‘நட்புக்காக’ வெற்றியைத் தொடர்ந்து அதனை உடனடியாகத் தெலுங்கில் ‘ரீமேக்’ செய்யத் துடித்தார் சிரஞ்சீவி. சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‘சினேகம் கோசம்’ படத்திற்கு அவரை அனுப்பி வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

அதனை முடித்த கையோடு ‘படையப்பா’வை மூன்று மாத காலத்தில் படம்பிடித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். பின்தயாரிப்புப் பணிகள் நிறைவு பெற்று, 1999 தமிழ் புத்தாண்டுக்கு அப்படம் வெளியானது.

அதன்பிறகு தியேட்டர்களில் அதற்குக் கிடைத்த வரவேற்பு நாம் அறிந்தது. இதுவே அக்காலகட்டத்தில் ரசிகர்களாலும் தமிழ் திரையுலக நட்சத்திரங்களாலும் விரும்பப்படும் இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமார் இருந்ததை நமக்குணர்த்துகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையில் ஓபனிங் பாடலான ‘என் பேரு படையப்பா’ இப்போது கேட்டாலும் நரம்புகள் தெறிக்கும் அளவுக்கு ஒரு எனர்ஜியைத் தருகிறது.

பாடல்கள் மட்டுமின்றி தீம் மியூசிக்கும் கூட இப்போதும் பிரெஷாக இருக்கிறது. 25 வருடங்கள் கழித்தும் இப்படத்தை நாம் மீண்டும், மீண்டும் பார்ப்பதற்கு ரஹ்மானின் இசையும் ஒரு மிகப்பெரிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

மிகப்பழமையான கதை

ஊரில் நன்றாக வாழ்ந்த குடும்பமொன்று சில காரணங்களால் நொடிந்து நூடுல்ஸ் ஆகிப் பிறகு கஷ்டப்பட்டு முன்னேறி மீண்டும் பழைய நிலையை அடையும் கதையே ‘படையப்பா’வில் இருந்தது. அதனால், அதில் ‘பண்ணையார்தனம்’ நிறைந்திருந்தது.

ஆனால் அந்த விஷயம் கொஞ்சம் கூடத் துருத்தலாகத் தெரியாமல் செந்தில், ரமேஷ் கண்ணா போன்றவர்களுடன் ரஜினி அடிக்கும் லூட்டி, சௌந்தர்யா உடனான காதல், ராதாரவி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உடனான மோதல் என்று முன்பாதி திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தியிருந்தது படக்குழு.

ரஜினியின் தந்தையாக சிவாஜி கணேசனையும், சித்தப்பாவாக மணிவண்ணனையும் காட்டியிருந்தது. அவர்களுக்கு இடையிலான அன்பும் மோதலும் எளிதாக ரசிகர்களை ஈர்த்தது. சிவாஜி, மணிவண்ணன், ராதாரவிக்கு அடுத்த தலைமுறையாக ரஜினி, சித்தாரா, வாசு விக்ரம், ராஜா ரவீந்திரா, லாவண்யா, நாசர், ரம்யா கிருஷ்ணனைக் காட்டியது.

அவர்களது வாரிசுகளாக வரும் அப்பாஸ், ப்ரீதாவுக்கும் கூடப் படத்தில் முக்கிய இடமுண்டு. அதனால், பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்தாலும், ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.

நான்கரை மணி நேரம்

அதன் விளைவாக, படத்தொகுப்பு முடிந்ததும் கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் ஓடும் அளவுக்கு ‘படையப்பா’ இருந்திருக்கிறது. அதில் எந்தக் காட்சியைத் தூக்குவது என்று தெரியாமல் படக்குழுவினர் குழம்பியிருக்கின்றனர். ’சங்கம் இந்திப்படம் போன்று இரண்டு முறை இடைவேளை விடலாம்’ என்று ரஜினியும் யோசித்திருக்கிறார்.

கதையின் மையத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவழியாகப் பல காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் வெட்டிக் கடாசியபிறகே, தற்போது நாம் ரசிக்கும் ‘படையப்பா’ தயாராகியிருக்கிறது. அந்தக் குழப்பங்களும் ஒழிந்திருக்கின்றன.

திரைக்கதை முடிவாகும்போதே, அதனைப் படம்பிடித்தால் எவ்வளவு நேரம் திரையில் ஓடும் என்பதை முன்கூட்டியே திட்டமிடும் இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார்.

படையப்பாவில் அந்த விஷயத்தை அவர் கண்டுகொண்டுகொள்ளாமல் இருந்ததற்குக் காரணம், கதை விவாதத்தின்போது ஒவ்வொரு பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தரும் வகையில் காட்சிகள் இடம்பெற வேண்டும் என்ற ரஜினியின் வற்புறுத்தலே.

லட்சுமி, அனு மோகன், மன்சூர் அலிகான், பிரகாஷ் ராஜ் உட்படப் பலருக்கு சில ‘பஞ்ச்’ வசனங்கள் தந்து ‘அவுட்புட்’டில் சமாளித்திருந்தார் இயக்குனர். நாசரின் மனைவியாக வரும் லாவண்யாவுக்கும், அவரது தந்தையாக நடித்த மணிவண்ணனுக்கும் இடையேயான உணர்ச்சிகரமான உரையாடல் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் அக்காட்சியின்போது அனைவரும் லாவண்யாவை கைதட்டிப் பாராட்டியிருக்கின்றனர். ஆனால், படத்தில் அக்காட்சி இல்லை. இது போன்ற பல அனுபவங்கள்.

அப்பாஸ் – ப்ரீதா ஜோடி போலவே, தொலைக்காட்சி பிரபலங்களாகத் திகழ்ந்த விஜயசாரதி – அனிதா வெங்கட் ஜோடியும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இப்படிப் பல்வேறுபட்ட கலைஞர்களை அவர்களது ரசிகர்கள் முகம் சுளிக்காத அளவுக்குத் திரையில் இடம்பெறச் செய்தது நிச்சயம் சாதனை தான்.

மீனாவுக்குப் பதிலாக ரம்யா

’படையப்பா’ படப்பிடிப்பு தளத்தில் நக்மா உடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். ஏனென்றால் இந்த படத்தில் சௌந்தர்யா நடித்த ’வசுந்தரா’ பாத்திரத்தில் முதலில் இடம்பிடித்தவர் அவர் தான். போலவே, ‘நீலாம்பரி’யாக மீனா தேர்வாகியிருந்தார்.

‘ஸ்னேகம் கோஷம்’ படத்தில் சிரஞ்சீவியைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வஞ்சம் செய்யும் பாத்திரத்தில் மீனா நடித்தார். அப்போது, அவரது முகத்தில் வில்லத்தனம் பெரிதாகத் தென்படாததைக் கவனித்த ரவிக்குமார், ’நீலாம்பரியாக அவர் நடித்தால் நன்றாக இருக்காது’ என்று ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார்.

அதன்பிறகே, அந்த பாத்திரத்தை ரம்யா ஏற்றிருக்கிறார்.ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் அந்த பாத்திரம் செய்த மாயாஜாலம் எத்தகையது என்பது நாம் அறிந்த ஒன்று. ஒரு பெரிய மாஸ் ஹீரோவுக்கு எதிராக ஒரு பெண்ணை வில்லியாக முன்னிறுத்துவதே வழக்கத்திற்கு மாறானது.

அது போன்ற விஷயங்களே, தனக்கென்று வகுத்திருக்கும் கமர்ஷியல் வட்டத்திற்குள் ரஜினி விதவிதமாகப் பல விஷயங்களை முயன்று பார்த்துள்ளதைக் காட்டும். ’கிக்கு ஏறுதே’ பாடல் தயாராகும்போது கே.எஸ்.ரவிக்குமாரை ரஜினி ‘ராகிங்’ செய்தது உட்பட ‘படையப்பா’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்களும் ஏராளம்.

படம் முழுமையடைந்து பெரிய விலைக்கு விற்பனையான பிறகு, வெளியீட்டுக்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுத்தது போக ஒரு கூடுதல் தொகையை நேரில் சென்று வழங்கியிருக்கின்றனர் தயாரிப்பு நிர்வாகிகள். இணை தயாரிப்பாளராகப் பணியாற்றிய பி.எல்.தேனப்பன் ஒரு நேர்காணலில் பகிர்ந்த தகவல் அது.

குறுகிய காலத் தயாரிப்பு

கதை விவாதம், பாடல் கம்போஸிங் தொடங்கி நடிகர் நடிகைகள் தேர்வு, படப்பிடிப்புத் தள அனுமதி, படப்பிடிப்பு நிகழ்வுகள், பின்தயாரிப்பு பணிகள் என்று படையப்பா தொடர்பான தகவல்கள் அனைத்தையும் திரட்டி ஒரு புத்தகமாக வெளியிடலாம். நிச்சயம் அது இளம் திரைப் படைப்பாளிகளுக்குப் பலன்களைத் தரும்.

காரணம், தயாரிப்பு உறுதி செய்யப்பட்டு சுமார் 15 மாத காலத்தில் இப்படம் திரையைத் தொட்டிருக்கிறது. அதிலும் கதை விவாதம், படப்பிடிப்பு நடந்த நாட்கள் மிகக்குறைவு. அந்தக் கால இடைவெளியில் பெரும் நடிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு தொழில்நுட்பக் கலைஞர்களைச் சுற்றிச் சுழலச் செய்வதெல்லாம் சாதாரண விஷயமல்ல.

அப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும்விதமாகச் சம்பந்தப்பட்டவர்கள் அதனைச் செய்ய வேண்டும். இன்று, ஒரு திரைப்படம் தயாராகப் பல ஆண்டுகள் ஆவதை ஒப்பிடும்போது குறுகிய காலத்தில் தயாராகிப் பெருவெற்றியை ஈட்டிய ‘படையப்பா’வின் சாதனைக்கு ஈடு சொல்லவே முடியாது. என்றும் அது நம்மை ஈர்க்கும்.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்ட படம் ‘படையப்பா’. தூத்துக்குடி கேஎஸ்பிஎஸ் திரையரங்கில் கண்ணன் மாமா உடன் இணைந்து இப்படத்தினை ரசித்தேன். அப்போது, ஆறாவது முறையாக அவர் அப்படத்தினைப் பார்ப்பதாகச் சொன்னார்.

திரையரங்கை விட்டு வெளிவரும்போது, கூட்டத்தில் சிலர் தங்களுடன் வந்த குழந்தைகளுக்குப் படையப்பாவின் சிறப்பை விளக்கிக் கொண்டிருந்தனர். இப்போதும் தொலைக்காட்சிகளில் ‘படையப்பா’ ஒளிபரப்பாகும்போது, அதே போன்றதொரு உரையாடலை அவர்கள் நிகழ்த்தக்கூடும். யார் கண்டது? அதுதானே நல்லதொரு கமர்ஷியல் திரைப்படம் நிகழ்த்தும் அற்புதம்.

-உதய் பாடகலிங்கம் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சமூகநீதி வேடம் போடும் திமுக: ராமதாஸ் காட்டம்!

ரமலான் பண்டிகையில் உச்சம் தொட்ட தங்கம்!

‘தி புரூப்’: அதிரடி ஆக்ஷனில் சாய் தன்ஷிகா

தமிழகத்தில் களைகட்டிய ரமலான்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share