இரட்டை இலை சின்னம் என்பது அதிமுகவின் பிரம்மாஸ்திரம் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (நவம்பர் 24) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
முதல் நிகழ்வாக ஜானகியின் திரைப்பயணம், அரசியல் பயணம் மற்றும் அதிமுகவுக்காக அவர் ஆற்றிய பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி விழாவில் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து பேசியபோது, “எம்ஜிஆரும் ஜானகியும் சேர்ந்து நடித்த முதல் படம் மருதநாட்டு இளவரசி. அந்த நேரத்தில் ஜானகி அம்மையார் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தார். எம்ஜிஆர் அப்போது தான் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அப்போதே, எம்ஜிஆரைப் பற்றி, இவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒருநாள் மிகப்பெரிய நடிகராவார் என்று ஜானகி கணித்தார்.
உச்சத்தில் இருந்த தனது திரை வாழ்க்கையை தியாகம் செய்து, எம்ஜிஆரை காதல் திருமணம் செய்து கொண்டார். கடைசி வரைக்கும் எம்ஜிஆரை சந்தோஷமாக, பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார்.
எம்ஜிஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் எந்த நேரத்தில் சென்றாலும் சாப்பாடு கிடைக்கும். ஒரு நாளைக்கு சாதாரணமாக 300 பேர் வரை சாப்பிடுவார்கள். சாம்பார் சாதம், தயிர் சாதம் போலில்லாமல் நல்ல நான் வெஜிடேரியன் சாப்பாடு கிடைக்கும். அது ஜானகி அம்மையார் மேற்பார்வையில் தான் நடக்கும். எம்ஜிஆரே இதைப்பற்றி சொல்லியிருக்கிறார்.
தற்போது அதிமுகவின் தலைமை அலுவலகம் இருக்கிற இடத்தின் ப்ராப்பர்ட்டி ஜானகியின் பெயரில் தான் இருந்தது. அவர் உழைப்பில் சம்பாதித்த பணம். எம்ஜிஆர் கேட்ட போது கட்சிக்காக எழுதிக்கொடுத்துவிட்டார். அப்படி ஒரு வள்ளல் குணம் படைத்தவர்.
அவர் எப்போதும் பெரிதாக வெளியில் வந்தது கிடையாது. வீடு, தோட்டம், எம்ஜிஆரை பார்த்துக்கொள்வது என்று தான் இருந்தார்.
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. அவருக்கு கொஞ்சம் கூட அதில் விருப்பமில்லை. சிலரின் வற்புறுத்தலின் காரணமாக தான் அவர் முதல்வர் ஆனார். அதன்பிறகு தேர்தல் வந்தபோது ஜானகி, ஜெயலலிதா இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிட்டனர். அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் என்பது அதிமுகவின் பிரம்மாஸ்திரம்.
அந்த தேர்தலில் ஜானகி தோல்வியை சந்தித்தார். யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் சுயமாக சிந்தித்து இரட்டை இலை சின்னத்தை ரினிவல் செய்து ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகினார். ஜானகியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் பண்டிகை தினங்களில் சி.ஏ எக்ஸாமா? – சு.வெங்கடேசன் காட்டம்!