தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக ஹீரோ, வில்லன் பல்வேறு கதாப்பாத்திரங்களில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ராஜேஷ். rajinikanth condolences to his friend rajesh death
கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சக நடிகரும் தனது நெருங்கிய நண்பருமான ராஜேஷ் மறைவையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர், “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனையடுத்து ரஜினி குறித்து ராஜேஷ் பெருமையாக பேசிய வீடியோவை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிருந்து வருகின்றனர்.
ரஜினிக்கு அப்படியொரு சக்தி இருக்கு!
அதில் ராஜேஷ் பேசியிருப்பதாவது, “அந்த கால மனிதர்களின் நாகரீகத்தை ஒப்பீட்டு பார்த்தால் அதில் ரஜினி மிக மிக உயர்ந்தவர். ரஜினி சாருடன் ஒரு முறை 2 மணிநேரம் பேசினேன். ஒரு முறை ஒரு மணிநேரம் பேசியிருக்கிறேன். பேசும்போது நம்மை வச்ச கண் வாங்காமல் பார்ப்பார். நாம் சொல்வதை நன்றாக கவனிப்பார்.
நான் பேசியபோது திடீரென எனக்கு இருமல் வந்தது. எனக்கு வழக்கமாக இருமல் வராது. உடனே வேகமாக எழுந்து டக்குனு டேபிளில் இருந்த பாட்டிலை எடுத்து திறந்து ’குடிங்க ராஜேஷ்’ என்றார். அவரின் அந்த வேகம் வியக்க வைத்தது. அது நடிப்பு இல்லை. அது அவருக்கு இயல்பாக வருகிறது. அந்த பண்பாட்டை ரசித்தேன், பாராட்டினேன். அது எல்லாம் தான் அவரின் உயர்வுக்கு காரணம்.
ரஜினி சார் பார்க்காதது மாதிரி தெரியலாம். ஆனால் தனக்கு பின்னால் யார் யாரெல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துவிடுவார். அவருக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது. என்னடா 360 டிகிரியையும் ஆழ்மனதிலேயே பார்த்துவிடுவாரா என்று கூட நான் நினைத்தது உண்டு.
ரொம்ப நாள் கழித்து ஒரு விழாவில் ரஜினி சாரை பார்த்தேன். ’சார் உங்களை சந்தித்து ரொம்ப நாளாச்சு’ என்றேன். ’அப்படியா, அப்படினா நாளைக்கு வாங்களேன்; என்றார். ’நாளை நவம்பர் 6ம் தேதி. நான் நவம்பர் 9ம் தேதி என்னுடைய திருமண தினத்தன்று வருகிறேன் சார்’ என்றேன். ’தாராளமாக வாங்க’ என்றார். அன்னைக்கு போனதும் என் மனைவி, பிள்ளைகளுடன் போட்டோ எடுத்து ஒரு பவுனில் பாபா முத்திரையுடன் கூடிய காசு கொடுத்தார். படிகட்டு இறங்கி வந்து வழியனுப்பி வைத்தார்.
சிலர் வீட்டிற்குள் இருந்தபடியே போயிட்டு வாங்க என்பார்கள். ஆனால் ரஜினி சார் அப்படி இல்லை. அது தான் அவரின் உயர்ந்த குணம். அவர் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்ததற்கு இதுபோன்ற குணங்கள் தான் காரணமாக இருக்கும். அதில் சந்தேகமே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
1974 முதல் பல்வேறு திரைபிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் ராஜேஷ், ரஜினிகாந்துடன் தனிக்காட்டு ராஜா, தாய் வீடு ஆகிய படங்களில் நடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.