ஒரே நாளில் வெளியான ரஜினி கமல் படங்கள் – அதிக வெற்றி யாருக்கு?

Published On:

| By Minnambalam Desk

தங்கமகன் – தூங்காதே தம்பி தூங்காதே

தனித்தனியாக ஹீரோ ஆன பிறகு கமல் – ரஜினி மோதலை ஆரம்பித்து வைத்த படம். இரண்டு படங்களுமே 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன. இல்லை இல்லை ஓட்டபட்டன.

ADVERTISEMENT

நல்லவனுக்கு நல்லவன் – எனக்குள் ஒருவன்

ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் எஸ்பி முத்துராமன் இயக்கிய படம் 150 நாட்களுக்கும் மேல் ஓடி வசூல் சாதனையை படைத்தது. வழக்கம் போல இளையராஜாவின் இசை படத்துக்குப் பக்க பலமாக அமைந்தது.

ADVERTISEMENT

கமலின் எனக்குள் ஒருவன் திரைப்படம் ஒரு கமலின் உடம்பிற்குள் இன்னொரு கமல் புகுந்து கொள்வது போன்று அமைக்க பட்ட கதையும், கராத்தே சண்டையும் மக்களுக்குப் புதிதாக இருந்தது. இதனால் மக்களை வெகுவாக கவரத் தவறியது இந்த படம்.

நான் சிகப்பு மனிதன் – காக்கி சட்டை

ADVERTISEMENT

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்த திரைப்படம் நான் சிகப்பு மனிதன். ரஜினியின் தங்கையை பாலியல் வன்புணர்வு செய்து , தாயின் மரணத்துக்கும் காரணமானவர்களைப் பழி வாங்கும் கதை. படம் பெரும் வெற்றி பெற்றது.

காக்கி சட்டை ராஜசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியானது. போலீசில் சேரவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு இருக்கும் நாயகன், அண்டர் கவர் பெயரில் வில்லன் உடன் பயணிப்பது போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படம். பாடல்கள் எல்லாம் மாபெரும் வெற்றி. படம் 200 நாட்களுக்கும் மேல் வெற்றி நடை போட்டது.

படிக்காதவன் – ஜப்பானில் கல்யாணராமன்

படிக்காதவன் படத்தில் . ரஜினி, அம்பிகா, சிவாஜி, நாகேஷ், மற்றும் பலர் நடித்தனர் ராஜசேகர் இயக்கி இருந்தார். இதில் சிவாஜி கனேசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் நடித்திருப்பார். 250 நாட்கள் ஓடியது.

கல்யாணராமன் படத்தின் சீக்குவலாக வந்தது ஜப்பானில் கல்யாணராமன். . கல்யாண ராமனின் ஆவி கதைக்குள் வருவது, ஜப்பான் காட்சிகள் என புதுமையாகவும் மக்களை மகிழ்விக்கும் விதமாகவும் அந்த படம் அமைந்தது. பாடல்கள் எல்லாம் வெற்றி பெற்றன. எனினும் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை..

மாவீரன் – புன்னகை மன்னன்

மாவீரன் படத்தில் மார்ட் என்ற அமிதாப்பட்சனின் இந்தி திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்திருந்தார் ராஜசேகர். ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்ஷ்ங்கர் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்துக்கு இளையராஜா தான் இசை. பீரியட் படமான இது வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் நடப்பது போன்ற கதையம்சத்தை உடையது. வட இந்தியாவில் வெற்றி பெற்ற அக்கதை அளவு இங்கு வெற்றி பெறவில்லை.

மறுபக்கம் புன்னகை மன்னனுக்கு உலகத்தரமான இசையை வழங்கியிருந்தார் இளையராஜா. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், என்ன சத்தம் இந்த நேரம், தீம் மீயூசிக் எல்லாம் இப்போதும் ஆட்டிப் படைப்பதை மறுக்க முடியாது. கே.பி இயக்க கமல் நடித்திருந்தார். எனினும் படம் சுமாராகத்தான் ஓடியது

மனிதன் – நாயகன்

ஏவிஎம் நிறுவனத்திற்காக, எஸ்.பி.முத்துராமன் இயக்க ரஜினிகாந்த், ரூபிணி நடித்திருந்த திரைப்படம் மனிதன். சில உரசல்களால் இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்கவில்லை. ரஜினியின் மாபெரும் ரசிகர் கூட்டத்தினால் இந்த படம் வெற்றி பெற்றது. 175 நாள் ஓடியது.

நாயகன் படம் கமலின் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய இந்த படம் இன்று வரை ரசிகர்களால் பேசப்படுகிறது என்பதை நாம் அறிவோம். இந்த படம் வெளியாகும் போதே ஒரு பிரச்னையை சந்தித்தது. இதற்கு சென்சார் அனுமதி தர மறுத்தது. பின்னர் வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாறு அல்ல எனக் கையெழுத்திடப்பட்ட கடிதம் காண்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இளையராஜா, பி.சி.ஶ்ரீராம் என உலகத்தரம் வாய்ந்த கூட்டணியின் உதவியுடன் இந்தப்படம் 175 நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்தது.

மாப்பிள்ளை – வெற்றிவிழா

ரஜினி, அமலா, ஸ்ரீவித்யா போன்றவர்கள் நடிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் மாப்பிள்ளை. அப்போது ஓர் ஆங்கில புத்தகத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டு போட்டியாக வெளியாகியிருந்த கமலின் வெற்றி விழா திரைப்படம் 100 நாட்கள் ஓடிய துரஜினியின் மாப்பிள்ளை 200 நாட்களைக் கடந்து சாதனை படைத்தது.

பணக்காரன் – இந்திரன் சந்திரன்

ரஜினிக்கு லாவாரிஸ் என்ற இந்திப்படம் பணக்காரன் என தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில் கௌதமி ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். ரஜினியும், பி.வாசுவும் இணைந்த முதல் படம் இது. ஏழையாக குடிகார வளர்ப்பு தந்தையிடம் வளரும் ரஜினி, ஒருகட்டத்தில் தன் நிஜ தந்தையிடமே அப்பா என தெரியாமலே வேலைக்கு சேருகிறார். பெரும் பணக்காரர் ஆன அவரது உயிருக்கு மற்றொரு மகன், உறவுகளால் ஆபத்து வர, இந்த சதியை எப்படி முடியடித்தார் என்பதுடன் ரஜினி இறுதியில் தன் தாய் – தந்தை குறித்து அடையாளம் காண்பது தான், கதைக்களம். இந்த படத்தில் வந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்…’ கல்யாண வீடுகளின் ட்ரேட் மார்க் சாங் ஆனது.

கமல், விஜயசாந்தி நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படத்தின் டப்பிங் தான் இந்திரன் சந்திரன் திரைப்படம். இதில் கமல் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் இரண்டு குரல்களில் பாடி பாராட்டுகளைப் பெற்றார் எஸ்பிபி. இந்த படம் சுமாராகவே ஓடியது.

தளபதி – குணா

தளபதியில் ரஜினியுடன் மம்முட்டி நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் நாயகன் போன்றே மும்பை தாதாக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இளையராஜாவின் இசையில் இந்த படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது.

குணா படத்தில் தனது நடிப்புத் திறமையை முழு வீச்சில் வெளிப்படுத்தியிருப்பார் கமல். ஆனாலும் அப்போது அது பாராட்டுகளைப் பெறத்தவறியது. “கண்மணி அன்போடு காதலன் பாடல்” மெகா ஹிட் ஆனாலும் இன்று நாம் பேசும் அளவுக்குக் கூட அக்காலகட்டத்தில் குணா திரைப்படம் பேசப்படவில்லை.

பாண்டியன் – தேவர் மகன்

பம்பாய் தாதா எனும் கன்னட படத்தின் ரீமேக் பாண்டியன். இது ஒரு அதிரடி படம் ஆகும். எஸ். பி. முத்துராமன் இயக்கியது. இதில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா மற்றும் அவரது மகன் கார்த்திக் ராஜா இசையமைத்தனர். எனினும் படம் சுமாராகவே ஓடியது.

தேவர் மகன் திரைப்படம் கமலின் சினிமா வாழ்வில் முக்கியமான ஒன்று. 150 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. கமல், கௌதமி, ரேவதி, நாசருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த படத்துக்கு பக்க பலமாக இருந்தார். இளையராஜாவின் இசை அபாரம். இந்த படத்தின் ஸ்கிரீன் பிளே மொத்தமாக 7 நாட்களில் கமல்ஹாசன் எழுதி முடித்தார் எனவும் கூறுவர். இந்த படத்துக்காக சிவாஜிகனேசனுக்கு தேசிய விருது கிடைத்தது.

பாட்ஷா – சதிலீலாவதி

பாட்ஷா ஒரு கிளாஸ் அண்ட் மாஸ் திரைப்படம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ரஜினியின் ஸ்டையில் திரையில் மிரட்டியது. 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது பாட்ஷா. ரஜினியின் திரை வாழ்வில் பாட்ஷா மிக முக்கியமான திரைப்படம்.

சதிலீலாவதி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்படமாகவே இருந்தாலும் பாட்ஷாவுடன் போட்டிப் போடவில்லை. பாலுமகேந்திரா இயக்கிய இந்த திரைப்படத்தில் கமல், ரமேஷ் அரவிந்த், கல்பனா, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு அனந்து, கதை எழுதினார். பாலு மகேந்திராவும், கமலும் இணைந்து, திரைக்கதை அமைத்தனர். கிரேஸி மோகன் வசனம் எழுதினார். எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் என, மூன்றையும் ஏற்றார், பாலு மகேந்திரா.

முத்து – குருதிப்புனல்

இன்றும் தொலைக்காட்ட்சி முன் நம்மை 3 மணி நேரம் உட்காரவைக்கக் கூடியத் திரைப்படம் முத்து. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படம் புதிய ரசிகர்களை ரஜினியிடம் கொண்டு வந்து சேர்த்தது.

மறுபக்கம் பி.சி.ஶ்ரீராம் இயக்கிய குருதிப்புனல் திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் இந்த திரைப்படம் பாராட்டப்பட்டாலும் பொது மக்களுடன் ஒட்டாத ஒன்றாகவே திரைக்கதை பயணித்தது. இதனால் கமல்ஹாசன் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த இந்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது. சென்னையில் மட்டும் ஓரளவு ஓடியது.

சந்திரமுகி – மும்பை எக்ஸ்பிரஸ்

சந்திரமுகி பி.வாசு இயக்கிய இந்தப் படம் சென்னையில் 700 நாட்களுக்கும் மேலாக ஓடியது சந்திரமுகி. ரஜினியுன் இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்திருந்தார். வடிவேலு – ரஜினியின் காமடிகள் படத்துக்கு பக்கபலமாக இருந்தது.

கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படுதோல்வி அடைந்தது. சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், பசுபதி, மனிஷா கொய்ராலா, நாசர், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியானது. ஆனால் இப்போது வெளியானால் கூட நல்ல வரவேற்பைப் பெறக்கூடிய தரமான பிளாக் காமடி படம் இது.

அதற்குப் பிறகு கமல் ரஜினி படங்கள் ஒரே நாளில் வெளியாகவே இல்லை

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share