மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது ரஜினியை மையமாக வைத்து மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் நட்புரீதியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாமரை சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாஜகவின் தலைமை அறிவித்தது.
அதன்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் தெரிவித்த வாழ்த்தை அறிக்கை மூலம் அனைவருக்கும் தெரிய வைத்திருக்கிறார்கள் புதிய நீதிக் கட்சியினர். இதுதான் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.
“ரஜினிகாந்த்தின் சம்மதத்துடன்தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதா? அப்படியெனில் இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்குத்தான் தன்னுடைய ஆதரவு என்பதை ரஜினிகாந்த் சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறாரா? ” என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த பிறகும், அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் அவரை பலரும் தொடர்புபடுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆன்மீக பயணம் சென்ற ரஜினிகாந்த் உத்தரபிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென்னை சந்தித்தார். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். சமீபத்தில் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்புக்கு சென்று வந்தார்.
இந்தசூழலில் ரஜினியை பலரும் சங்கி என்று விமர்சித்து வந்தனர். இதுதொடர்பாக லால் சலாம் பட நிகழ்ச்சியில் பேசிய அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்பா சங்கி இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் ரஜினி ஏ,சி.சண்முகத்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ரஜினி ஏ.சி. சண்முகத்தைப் போல வேறு கட்சிகளைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கலாம். ஆனால், இதை ஏ.சி. சண்முகம் செய்திக் குறிப்பாக வெளியிட்டதால் விவாதம் ஆகியுள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Padai Thalaivan: சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்
Weekend Movies: திரையரங்குகள், ஓடிடி-யில்… இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள்!
