ரஜினியை அப்படி பேசியிருக்கக் கூடாது: பாலாஜி விளக்கம்!

Published On:

| By Balaji

ஆர்.ஜே.பாலாஜியின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமானது அவர் ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி திரைப்படம். அவர், அரசியல்வாதியாக அந்தப் படத்தில் நடித்ததைவிட, இப்போது அரசியல்வாதியாகவே மாறி ஒரு தாவு தாவியிருக்கிறார். அதுதான் சோஷியல் மீடியா முழுக்கவும் பேச்சாக இருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் நவம்பர் 14 அன்று ரிலீஸாகிறது. இதன் ஒன்லைன் மிகவும் சிம்பிளான ஒன்று. அம்மனை ஓரம்கட்ட நினைக்கும் போலி சாமியாரை, தனது பக்தனுடன் சேர்ந்து அம்மன் எப்படி காலி செய்கிறார் என்பதை நகைச்சுவையான திரைப்படமாகக் கொடுக்க ஆர்.ஜே.பாலாஜி முயற்சி செய்திருக்கிறார் என்கின்றனர். ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவை குறித்து இப்போது எந்த விமர்சனமும் வேண்டாம் என்பதால் செய்திக்கு வருவோம்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. நடிப்பதோடு என் வேலை முடிந்தது என்று படத்தின் எந்த புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் நயன்தாரா பெட்டியைக் கட்டிவிடுவார் என்பதால், மூக்குத்தி அம்மனின் தேரினை ஆர்.ஜே.பாலாஜி ஒருவராகவே கட்டி இழுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார். எனவே, இரவு பகல் பாராமல் சோஷியல் மீடியாக்களில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவருகிறார்.

‘நம்மள டென்சன் பண்றதுக்குன்னே வருவாய்ங்க போல’ என்று வடிவேலு சொல்வதுபோல, ஆர்.ஜே.பாலாஜியிடம் வம்பு வளர்க்கும் கேள்விகளையே ரசிகர்கள் கேட்டுவருகின்றனர். அப்படியொரு ரசிகர் கேட்ட கேள்வி தான் ஆர்.ஜே.பாலாஜியை தாவ வைத்தது.

ஆர்.ஜே.பாலாஜி ரேடியோ ஜாக்கியாக இருந்த காலத்தில் ஒரு பேட்டியின்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் “ரஜினி எப்ப வருவாருன்னு அவருக்கே தெரியாது” என்று கூறி ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். அந்த விஷயத்தைக் கொண்டுவந்து பாலாஜியிடம் கேட்டு “உங்களுக்கு ரஜினியைப் பிடிக்காதா?” என்று கேட்டிருக்கிறார் ஒரு ரசிகர். இதற்குப் பதிலளித்த பாலாஜி “ரஜினி மிகவும் அன்பான மனிதர். சின்ன வயசுல என் தாத்தா ரஜினி ரொம்ப நல்லவர்னு சொல்லியிருக்கார். அப்பவே அது என் மனசுல பதிஞ்சிருச்சு. ஆனால், நான் ஏன் ரஜினியை அப்படி பேசினேன் எனத் தெரியவில்லை. நான் இந்த வீடியோவைப் பார்க்கும்போதெல்லாம் அவரிடம் மன்னிப்பு கேட்பது போல நினைத்துக்கொள்வேன். அவரைப் போல ஒரு நல்ல மனிதரைப் பார்க்கவே முடியாது” என்று பாலாஜி சொன்ன பிறகே ரசிகர்கள் முற்றுகையைக் கலைத்தனர். ஆனாலும், ‘அரசியலுக்கு வருவதற்கான வயதை ரஜினி இழந்துவிட்டார்’ என்று பாலாஜி அடித்திருந்த கமெண்ட் பல ரசிகர்களை ஆழமாக பாதித்திருக்கிறது. எனவே, இந்த விஷயத்தை அப்படியே எடுத்து பாலாஜியை வைத்து மீம், வீடியோக்கள் எனத் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

-முத்து-�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share