ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் அவரது உருவப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்ரவரி 24) அஞ்சலி செலுத்தினார். rajini respect jeyalalitha birthday
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் போயஸ் கார்டன் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு சென்று அங்குள்ள அவரது படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “போயஸ் கார்டனில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் எனக்கு அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று இங்கு வந்தேன். இங்கு நான் வருவது இது நான்காம் முறை.
1977ல் அவரை பார்க்க முதல் முறையாக வந்திருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அப்போது வந்திருந்தேன்.
இரண்டாம் முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க இங்கே வந்திருந்தேன். மூன்றாம் முறை மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் வழங்க வந்தேன். இது நான்காம் முறை.
அவர் இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும். இங்கு வந்து அவர் வாழ்ந்த வீட்டில், அஞ்சலி செலுத்தி அவரது இனிப்பான, சுவையான நினைவுகளோடு செல்கிறேன். ஜெயலலிதா நாமம் வாழ்க” இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.