தமிழகத்தில் பல நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவர்களின் படங்கள் வெளியாகும் போது கட்டவுட் வைப்பது, பாலாபிஷேகம் நடத்துவது என்று அமர்க்களப்படுத்துவதும் உண்டு.
மாணவர்களும் லட்சக்கணக்கில் நடிகர்கள் மன்றங்களில் சேர்ந்து பணியாற்றுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். கட்டவுட் வைத்த போது கீழே விழுந்து இறந்தவர்களும் உண்டு.
இதன் காரணமாக கமல்ஹாசன், அஜித்குமார் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டனர். ஆனாலும், சில முக்கிய நடிகர்களின் மன்றங்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் , சென்னை பல்லாவரம் அனகாபுத்தூரை சேர்ந்த ரகு நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார்.
ஆட்டோ ஓட்டுநரான இவர், தான் வசித்த பகுதியில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை தொடங்கி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். தனது பெயரையும் ரஜினி ரகு என்று மாற்றிக் கொண்டார்.
திருமணம் முடிந்து இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். ரஜினி படம் வெளியானால் கட்டவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
கடன் வாங்கி இதனை செய்ததாக தெரிகிறது. இதனால், பல லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இதை அடைக்க முடியாமல் திணறியுள்ளார். இந்த நிலையில், மனைவி சித்ரா வெளியே சென்றிருந்த நிலையில், இன்று வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்து போனார்.
வீட்டுக்கு திரும்பி வந்த சித்ரா, கணவர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார். தொடர்ந்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது, “கடனை அடைக்க ரகு வங்கி ஒன்றில் கடன் வாங்கியுள்ளார். பின்னர், அதையும் அடைக்க முடியாமல் திணறியுள்ளார். நேற்று காலை வங்கி ஊழியர்கள் கடனை அடைக்க கூறி திட்டியுள்ளனர்.
இல்லையென்றால் ஆட்டோவை பறித்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், அவமானமடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரோட மனைவியிடம் சடலத்தை அடக்கம் செய்ய கூட கையில் பத்து பைசா கிடையாது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லை. ரஜினி சார்தான் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும்” என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
‘கங்குவா’வில் விட்டதை பிடிப்பாரா சூர்யா? – ‘ரெட்ரோ’ ரிலீஸ் எப்போது?