முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Rajendra Balaji case
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
பண மோசடி வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி கடந்த 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார்.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த ரவீந்திரன் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆனால் முன்னாள் அமைச்சர் என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள் என்று ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், “ ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் இன்னும் அனுமதி வழங்கவில்லை. . தமிழ்நாடு அரசு சார்பில் 2 முறை வழங்கப்பட்ட ஆவணங்கள் மீது எந்த பதிலும் வரவில்லை” என்று வாதிடப்பட்டது.
தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரின் செயலாளர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. Rajendra Balaji case