ராஜஸ்தான்: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு

Published On:

| By admin

மத்திய அரசு கலால் வரியை குறைத்ததைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அரசு நேற்று பெட்ரோல் மீதான வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை லிட்டருக்கு 2.48 ரூபாயும் மற்றும் டீசல் லிட்டருக்கு 1.16 ரூபாயும் குறைத்தது.

நேற்று அதிக எரிபொருள் விலையிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும் மற்றும் டீசல் மீது 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்த நடவடிக்கையால் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் தாக்கம் ஏற்படும்.” என்று தெரிவித்தார்.

மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களுக்கும் மானியம் வழங்கப்படும் என்றார். சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் மாநிலங்களை வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து நேற்று ராஜஸ்தான் அரசு மாநிலத்தில் வாட் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் தனது டிவிட்டர் பக்கத்தில், “மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ள நிலையில், மாநில அரசு வாட் வரியில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 2.48 ரூபாயும் மற்றும் டீசல் மீது 1.16 ரூபாயும் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பெட்ரோல் 10.48 ரூபாயும் மற்றும் டீசல் 7.16 ரூபாயும் குறையும்.” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், கேரள அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை முறையே 2.41 ரூபாயும் மற்றும் 1.36 ரூபாயும் குறைப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share