நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளையொட்டி ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் க்ளிம்ப்ஸ் புகைப்படத்தை இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்திய சினிமாவில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தின் மூலம் புது பாய்ச்சலை காட்டியவர் இயக்குநர் ராஜமெளலி. ஈகா, மகதீரா படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கிய பாகுபலி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரும் சாதனை படைத்தது.
பாகுபலி படத்தின் முதல் பாகம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 1800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்தது.
அதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் உலகளவில் கவனம் பெற்றதுடன், ரூ.1300 கோடி வசூலை அள்ளியது.

தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கி வரும் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படம் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் கிளிம்ப்ஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளார் ராஜமெளலி.
மேலும், படத்தின் முக்கிய அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்து, ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ராஜமௌலி.

அதில், “இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அன்பான சினிமா ஆர்வலர்களே, மகேஷ்பாபுவின் ரசிகர்களே,
நாங்கள் படப்பிடிப்பு தொடங்கி சிறிது காலம் ஆகிறது, படத்தைப் பற்றி அறிய உங்கள் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம். இருப்பினும், இந்த படத்தின் கதை மற்றும் நோக்கம் மிகவும் விரிவானது, வெறும் போஸ்டர்களோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகளோ அதற்கு நியாயம் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் உருவாக்கி வரும் புதிய உலகத்தை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தில் நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம். இது நவம்பர் 2025 இல் வெளியிடப்படும். மேலும் இதை இதற்கு முன் பார்த்திராத வெளிப்பாடாக மாற்ற முயற்சிக்கிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி” என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
