பிரதான உணவுகள் சாதாரணமாக இருந்தாலும் அவற்றுடன் பரிமாறப்படும் சைடிஷ் சுவையாக இருந்தால்தான் சாப்பிடுபவர்கள் சூப்பர் சமையல் என்பார்கள். அந்த வகையில் சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, நாண் என்று எல்லாவற்றுடனும் சாப்பிடுவதற்கும் ஏற்றது இந்த ராஜ்மா மசாலா.
என்ன தேவை?
- ராஜ்மா – 200 கிராம்
- பெரிய வெங்காயம் – ஒன்று
- தக்காளி – மூன்று
- புளி – சிறிய உருண்டை
- பூண்டு – ஏழு பற்கள்
- பட்டை – இரண்டு சிறிய துண்டு
- ஏலக்காய், கிராம்பு – தலா மூன்று
- அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை – தலா ஒன்று
- சோம்பு – அரை டீஸ்பூன்
- கசகசா – ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – ஐந்து
- வெல்லம் – சிறிய துண்டு
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ராஜ்மாவை 10 மணி நேரம் ஊறவைத்து, பின்பு குக்கரில் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். தக்காளியை வேகவைத்து, தோலுரித்து அரைத்துக்கொள்ளவும். புளியை கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்துவைத்துக் கொள்ளவும். வாணலியைச் சூடாக்கி அதில் சோம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு, பட்டை, கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுக்கவும். பின்பு மிக்ஸி ஜாரில் வறுத்த மசாலா, பூண்டுப் பற்கள் மற்றும் வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். பின்பு புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கலந்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். இதில் வேகவைத்த ராஜ்மா, சிறிதளவு வெல்லத்துண்டு சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கடைசியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.