ADVERTISEMENT

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை.. 7 நாட்களுக்கான மழை நிலவரம் இதோ

Published On:

| By Pandeeswari Gurusamy

Rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்க வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் இலங்கை பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (26-11-2025) காலை 05.30 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, காலை 08.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது.

ADVERTISEMENT

இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரவு 23.30 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவியது. அதன் பிறகு, இது மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25-11-2025) காலை 05.30 மணி அளவில் “சென்யார்” புயலாக மேலும் வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவியது. பிறகு, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, காலை 7.30-8.30 மணி அளவில் இந்தோனேசியா கடற்கரையை கடந்தது.

ADVERTISEMENT
7 நாட்களுக்கான மழை வாய்ப்புகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று (நவம்பர் 26) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நவம்பர் 28ம்தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நவம்பர் 29ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வரும் 30ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், டிசம்பர் 1ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், டிசம்பர் 2 ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மழை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share