மழைநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி… ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் : எடப்பாடி

Published On:

| By christopher

மழைநீர் கால்வாயில் விழுந்து பலியான இளைஞரின் மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் சாலையோரம் மூடப்படாமல் இருந்த மழைநீர் கால்வாயில் நேற்று (செப்டம்பர் 29) தவறி விழுந்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இரண்டு மாதங்களுக்கு மேலாக உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாகவும், விரைந்து பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் அதிகளவில் செல்லும் பிரதான சாலையில் கால்வாய் மூடப்படாமல் உள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை, அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார், அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என அவல நிலையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் திமுக அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே இத்துயரச் சம்பவத்திற்கு காரணம்.

ADVERTISEMENT

இம்மரணத்திற்கு தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, குடும்ப நலனையே பிரதானமாக கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தவெக கொடியில் யானை சின்னம் : பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதில்!

முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர் மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share