கன மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 14) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், கன மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 11,12,13 ஆகிய மூன்று தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கன மழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் தொடர் விடுமுறையாகி உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன் பதவி நீக்கம்!

Comments are closed.