சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று (ஜூன் 18) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்குத் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர்,
மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள் திருவண்ணாமலை, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை தமிழக கடற்கரை பகுதிகள், குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்குக் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும்.
இந்த மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வந்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடலின் தென் பகுதியில் இருந்து வட பகுதியை நோக்கி காற்று சென்ற போது காற்றின் வேகம் கூடியுள்ளது.
மேலும் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற மத்திய பகுதி மெதுவாக வட திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக இரண்டு மூன்று தினங்களுக்கு மழை தொடரும்.
மீனம்பாக்கத்தை பொறுத்தவரைக்கும் கடந்த 73 ஆண்டுகளில் 2 வது அதிகபட்ச மழை மற்றும் நுங்கம்பாக்கத்தில் 3 வது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
மோனிஷா
செந்தில் பாலாஜி வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு!
தங்கம் வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!
கலைஞர் கோட்டம் திறப்பு விழா: திருவாரூரில் மு. க. ஸ்டாலின்

