மின்நிலையங்களுக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வதில் தெற்கு ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது.
மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிக்க வட மாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரி போக்குவரத்து கடந்த மே மாதம் மட்டும் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் 0.263 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் வந்து சேர்ந்துள்ளது.
மேலும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெற்கு ரயில்வே முதன்முறையாக மே மாதத்தில் மட்டும் 3.621 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 49 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு ரயில்வே 6.857 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது. கடந்தாண்டு 5.323 மில்லியன் டன் சரக்குகளையே கையாண்டு இருந்தது. அதாவது இந்த ஆண்டு 29 சதவிகிதத்துக்கும் அதிகமான சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
நிலக்கரி, இரும்பு, சிமென்ட், உணவுப் பொருட்கள், உரம், பெட்ரோலிய பொருட்கள், பெட்டகங்கள் ஆகியவை தெற்கு ரயில்வேயில் ரயில்கள் மூலம் கையாளப்பட்ட முக்கிய சரக்குகளாகும்.
**-ராஜ்**
