டாஸ்மாக் நிறுவனத்தில் ரெய்டு நடந்தது வெட்ககேடானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். Raid on TASMAC is Shameful
இன்று (மார்ச் 6) தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் நான்காவது, ஐந்தாவது மாடியில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,
“தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே,
இன்று நடப்பது என்ன,ஸ்டாலின் ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு” என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக 2016ஆம் ஆண்டு அப்போதைய தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவின் இல்லம், மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இதை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ” தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அரசு அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டதை குறிப்பிட்டு ஸ்டாலின் பாணியிலேயே விமர்சித்துள்ளார் அண்ணாமலை. Raid on TASMAC is Shameful