ராகுல் காந்தி நடத்திய ‘இந்தியா கூட்டணி’ கூட்டம்- ஆக.11-ல் தேர்தல் ஆணையம் நோக்கி 24 கட்சிகள் பேரணி!

Published On:

| By Mathi

Rahul Gandhi INDIA Bloc New

‘வாக்குகள் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து ஆகஸ்ட் 11-ந் தேதி நாடாளுமன்றத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி 24 எதிர்க் கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா கூட்டணி’ கண்டனப் பேரணி நடத்த உள்ளது (Rahul Gandhi India Bloc).

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் விவரங்களின் அடிப்படையில் போலி வாக்காளர்கள் எப்படி எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி விவரித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று டெல்லியில் தமது இல்லத்தில் திடீரென இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை ராகுல் காந்தி கூட்டினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் இன்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்தியா கூட்டணி கூட்டம் முடிவடைந்த பின்னர் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகய் கூறுகையில், இந்தியா கூட்டணி தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தை ராகுல் காந்தி இன்று நடத்தினார். 24 கட்சிகளின் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அகிலேஷ் யாதவ், சரத்பவார், சித்தராமையா, உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குகள் திருட்டு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றார்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கூறுகையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை ராகுல் காந்தி முதல் முறையாக கூட்டியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்குகள் திருட்டுக்கு உதவியாக இருப்பது உள்ளிட்டவை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வாக்குகள் திருட்டு பற்றி ராகுல் காந்தி விவரமாக விளக்கினார். இன்றைய கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஆகஸ்ட் 11-ந் தேதி, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share